கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நேற்று இருமுடி கட்டி வந்து, சபரிமலையில் தரிசனம் செய்தார்.

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், நேற்று மாலை, 4:30 மணிக்கு, மகன் கபீருடன் பம்பை வந்தார். 5:10 மணிக்கு இருமுடி கட்டுடன், மலை பாதையில், சுவாமி அய்யப்பன் ரோட்டில் நடக்க தொடங்கினார். இரவு, 7:00 மணிக்கு சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் வந்து சேர்ந்தார். அவரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின், படிபூஜையில் பங்கேற்றார்.

தலையில் இருமுடி கட்டுடன், 18ம் படி வழியாக சென்று, ஸ்ரீகோவில் முன் தலையில் இருமுடி கட்டுடன் நின்றபடி தரிசனம் செய்தார்.தந்திரி கண்டரரு ராஜீவரரு, அவருக்கு பிரசாதம் வழங்கினார். நேற்று இரவு சன்னிதானத்தில் தங்கிய கவர்னர், இன்று காலை மாளிகைப்புறம் கோவில் அருகே, சந்தன செடிகளை நட்ட பின், திருவனந்தபுரம் செல்கிறார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.ஜ.பி., தரிசன வழியாக செல்லாமல், பக்தர்களின் வரிசையில் சென்று தரிசனம் செய்தார். கவர்னர் வருகையை ஒட்டி, சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.