‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியீடு

‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர் நடித்துள்ள படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.
படம் குறித்து இயக்குநர் ஞானவேல் கூறுகையில், ”பெரும்பான்மையான குடும்பங்களில் மூத்த குழந்தையையோ அல்லது இளைய குழந்தையையோ கொஞ்சுவார்கள். அவர்கள் அப்பா செல்லமாக, அம்மா செல்லமாகவோ இருப்பார்கள். ஆனால், இடையில் பிறந்த குழந்தை மீது பெரிதாக கவனம் இருக்காது. அப்படி இடையில் பிறந்த ஒருத்தன் இந்த உலகத்தை மாற்றி அமைக்கப் புறப்படுகிறான். நடு பெஞ்ச் மாணவர்களின் முக்கியத்துவத்தைக் கூறுவதே ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை” என்றார்.
‘ரத்த சரித்திரம்’, ‘பயணம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேலின் முதல் படம் கூட்டத்தில் ஒருத்தன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ‘கூட்டத்தில் ஒருவன்’ என்றே படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. பிறகு ‘கூட்டத்தில் ஒருத்தன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். ‘கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம்’ ஜூலை 14-ம் தேதி வெளியாக உள்ளது.
‘மாயா’, ‘ஜோக்கர்’, ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது.