கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: மொத்த செலவு ரூ.50,000 கோடி

கூடங்குளத்தில் உள்ள இந்தியாவின் பெரிய அணு மின் நிலையத்தில் மேலும் 2 அணு உலைகளை நிர்மாணிக்க ரூ.50,000 கோடி செலவாகும். இந்தச் செலவில் பாதித்தொகையை ரஷ்யா கடனாக வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி நடைபெறத் தொடங்கும் என்று இந்திய அணு மின் நிறுவன சேர்மமும் நிர்வாக இயக்குநருமான எஸ்.கே.சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் 5 மற்றும் 5-வது அணு உலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் வியாழனன்று கையெழுத்திட்டது.

“இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கும் ஆகும் செலவு ரூ.50,000 கோடி, இந்த புதிய இரண்டு அணு உலைகளில் முதலாவது 66 மாதங்களில் உருவாகும் 2-வது அணு உலை இதன் பிறகு 6 மாதங்களில் உருவாகும்” என்றார் சர்மா.

ரஷ்யாவின் அணு உலை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்தின் கிளை இந்த அணு உலைகளை உருவாக்குகிறது.

ரஷ்ய அரசு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு இத்திட்டத்துக்காக கடனுதவி அளிக்கிறது.

கூடங்குளத்தில் அனைத்து 6 அணு உலைகளும் மின் உற்பத்தியைத் தொடங்கி விட்டால் மொத்தமாக 6,000 மெகாவாட் மின்னுற்பத்தி கிடைக்கும். தற்போது உள்ள 22 அணு மின் நிலையங்கள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாவது குறிப்பிடத்தக்கது.