குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர். ஆனால் கொரோனா பாதிப்புகளால் அதையும் செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்டது.

நேரம் ஆக ஆக குழந்தையின் அழுகுரல் அதிகரித்தது. இதனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் உமா என்ற நர்ஸ் அந்த குழந்தைக்கு பால் கொடுத்தார். அதனால் பசியாறிய குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நர்சின் கணவர் போன் செய்துள்ளார். அப்போது குழந்தை குறித்த தகவலை கூறியபோது ,பாதுகாப்புடன் குழந்தையை பராமரித்துக்கொள்ளுமாறு அவர் கணவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், காலையில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் நர்ஸ் அவருக்கு பதிலளித்தார். செவிலியரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது.