‘குற்றம் 23’-க்கு ரஜினி பாராட்டு: நெகிழ்ச்சியில் அருண் விஜய்

‘குற்றம் 23’ பார்த்துவிட்டு ரஜினி வெகுவாக பாராட்டியிருப்பதால், அருண் விஜய் மிகுந்த நெகிழ்ச்சியில் உள்ளார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மஹிமா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குற்றம் 23’. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தை இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

மார்ச் 2-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், அருண் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினி. படம் பார்த்துவிட்டு அழைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய வீட்டில் பிரத்யேகமாக ‘குற்றம் 23’ படத்தைப் பார்த்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அருண் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் “ரஜினி அழைத்தார். என்னுடைய நடிப்பு , உடல் மொழி குறித்தும், படத்தின் கதை அதன் உருவாக்கம் குறித்தும் பாராட்டினார். ‘நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்’ இது தான் அவருடைய உண்மையான வார்த்தை” என்று தெரிவித்துள்ளார். ரஜினி பாராட்டியிருப்பதால், ‘குற்றம் 23’ படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.