குமரி மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ஜெயக்குமார்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வங்கக்கடலில் மாலத்தீவு அருகே புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்களின் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன் கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

“10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளனர்.

புயல் உருவாகும் பகுதிகளில் எந்தவித விசைப்படகுகளும் இல்லை. மகாராஷ்டிரா கடல் எல்லையில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் கரை திரும்பவில்லை.

ஒக்கி புயலால் காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறார்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.