குஜராத் கலவரம்: காங்கிரசுக்கு சிக்கல்

குஜராத் மாநிலத்தில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநில தொழிலாளர்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களுக்கு காங்., எம்.எல்.ஏ., தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில், பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பலர் குடும்பங்களுடன் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தும் உள்ளனர். இச்சூழ்நிலையில்,கடந்த செப்., 28 ம் தேதி குஜராத்தில் ஹிமத்நகர் என்ற இடத்தில், 14 வயது சிறுமியை பீஹார் ஆசாமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவத்திற்கு பிறகு, வெளி மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக பல ஆயிரம் பேர் குஜராத்தை விட்டு பீஹார், உ.பி., மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு ஓட துவங்கியுள்ளனர். இதன் காரணமாக ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகி விட்டது. பிரச்னையை தீர்க்கும்படி மூன்று மாநில முதல்வர்களும் குஜராத் மாநில முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக, 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஷத்ரிய தாகூர் சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர்.

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடக்கும் போது, பதிதார் எனப்படும் படேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல், தலித் சமூகத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேத்வானி, தாகூர் சமூகத்தை சேர்ந்த அல்பேஷ் தாகூர் ஆகிய மூன்று பேர் பா.ஜ.,வுக்கு பெரும் குடைச்சல் கொடுத்தனர். இருப்பினும், அங்கு பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இதில் அல்பேஷ் தாகூர் அந்த தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் சமீபத்தில் நடந்த கலவரங்களுக்கு இவர் தலைமை வகிக்கும் அமைப்பினர் தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என பா.ஜ.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அவரை கட்சியை விட்டு நீக்கும்படி காங்., தலைவர் ராகுலுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் கூறுகையில்,” கலவரங்களுக்கு யார் காரணம் என்பது நமக்கு நன்றாக தெரியும். அல்பேஷ் தாகூரிடம் இப்பிரச்னை குறித்து காங்., தலைவர் ராகுல் விசாரிக்க வேண்டும்,” என்றார்.

டில்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் சாம்பிட் பாத்ரா கூறுகையில்,” குஜராத், பீஹார் மற்றும் இந்தியா மீது ராகுலுக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், காங்., கட்சியில் இருந்து அல்பேஷ் தாகூரை நீக்க வேண்டும். ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதையே இது காட்டுகிறது,” என்றார்.