கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கம் நிறைந்தவர்களாக இருப்பர்: மோடி

புதுடில்லி: பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும் மற்றும் ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் டிஜிட்டல் வடிவத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பகவத் கீதை நம்மை சிந்திக்க தூண்டுகிறது. நம்மை கேள்வி கேட்பவர்களாகவும், திறந்த மனதுடன் விவாதிக்க நம்மை ஊக்குவிக்கவும் கீதையால் முடியும். நம்முடைய மனம் திறந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையிலேயே இரக்கம் நிறைந்தவர்களாகவும் மற்றும் ஜனநாயக குணமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

கடந்த காலத்தில் உலகத்திற்கு மருந்துகள் தேவைப்பட்டபோது, இந்தியாவால் என்ன முடியுமோ அவற்றை அவர்களுக்கு வழங்கியது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் சென்றுள்ளன. நாம் மனிதகுலத்திற்கு உதவவும், குணமளிக்கவும் விரும்புகிறோம். இதனையே கீதை நமக்கு போதனை செய்கிறது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் மையக்கருத்து என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே வளங்களையும், உருவாக்குவது ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.