கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

invitation

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கொக்குவில் கிழக்குப் பகுதியில் திருவாளர் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வர்தான்   இரவீந்திரநாத் ஆவார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப் பாதுகாவலராவார். இவர் தனது  கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின் கொழும்பு அக்குனைஸ் கல்லூரியிலும் கற்று,1973ம் ஆண்டு பேராதனைக் பல்கலைக் கழகத்திற்கு விவசாயவிஞ்ஞான பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதுடன் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் சுபாவம் கொண்டவர். பெருமையற்றவர். எல்லாரையும் சமமாக மதிப்பவர். எவருக்கும் உதவிசெய்வதில் பின்நிற்கமாட்டார். மிகுந்த இரக்கம்கொண்டவர். 1978ம் ஆண்டு கரடியனாறு விவசாய ஆராச்சி நிலையத்தில் ஆராச்சியாளராக சேர்ந்து (Research officer) பணிபுரிந்தார். அங்கு இவரது ஆராச்சியின் பயனாக சிறந்த இன மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சோயா பயிரையும் அறிமுகம் செய்தார்.
தற்போது கிழக்குப் பல்கலைக் கழகமாக விளங்கும் முன்னைநாள் வந்தாறு மூலை மத்திய மகா வித்தியாலயம்1981 அக்டோபர்மாதம் 10ம் திகதி பல்கலைக்கழக கல்லூரியாவதற்கும்  பின்னர் அது பல்கலைக்கழகம் ஆவதற்கும்  கலாநிதி இரவீந்திரநாத்தினது பங்களிப்பு முக்கியமானது. பல்கலைக் கழக கல்லூரி ஆரம்பத்தில் துணை விரிவுரையாளராக பணிபுரிந்த கலாநிதி இரவீந்திரநாத் அவர்களின் திறமையால் பேராசிரியராக,வியசாய உயிரியல் துறைத் தலைவராக,துணைவேந்தராக படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார். இவர் மத நம்பிக்கையும் சமூக ஈடுபாடும் கொண்டவர். பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்விகற்கும் காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் தவறாது காலையில் குறிஞ்சிக்குமரனையும் மாலையில் கண்டி கட்டுக்கலை வினாயகரையும் வழிபடுவார். கிழக்கு மாகாணம் கல்வி வளர்ச்சியில் பின்தங்கி இருந்ததால் கல்வித்தரத்தை உயர்த்த அயராது உழைத்தவர். பல்துறை வளர்ச்சியிலும் சமூகசேவையிலும் ஆர்வமாக பங்கெடுத்தார். பல மாணவர்கட்கு  எந்தவித பணமும் பெறாமல் மாலையில் பாடம் சொல்லிக் கொடுப்பார். செங்கலடி மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராக இருந்து அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டு,இன்றைய நிலைக்கு உயர்த்தியுள்ளார். மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தால் க.பொ.த உயர்;தர வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தினை உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட்டார். விவசாய வெளிவாரிப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் விவசாய ஆசிரியர் பலரை விவசாயப் பட்டதாரியாக்கிய பெருமையும் இவருக்குரியதாகும். விவசாய பீடத்தில் கற்கும் வெளிவாரி மாணவர்களை கல்வியாண்டின் இரண்டாம் வருடத்தில் உள்வாரி மாணவர்களாக சேர்த்துக் கொள்வதற்கு,உள்வாரி மாணவர்களிடம் இருந்து உருவான  பெரும்எதிர்ப்புக்களை இலகுவாக முறியடித்து உள்வாரி மாணவர்களாக சேர்த்தார். 1983ம்ஆண்டு இனக்கலவரத்தில் ஆதரவு தேடி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த மக்களுக்கு உதவுவதற்கு பல்கலைக்கழக மாணவரை அழைத்துச் சென்று குடிசைகள் அமைத்துக் கொடுத்து தானும் அவர்களுடன் வீடுவீடாகச் சென்று உணவுப் பொருட்கள்,உடுபுடவைகள் சேகரித்து வழங்கியவர். 1990ம்ஆண்டு நடைபெற்ற  இரண்டாம்கட்ட ஈழப்போரின்போது,சூழலில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு கிழக்குபல்கலைக்கழகம் அடைக்கலம் கொடுத்ததுடனஇ; சுமார் ஐம்பதாயிரம் தழிழ் மக்களுக்கென பல்கலைக்கழக சமூகத்தால் நிர்வகிக்கப்பட்ட அகதி முகாமிலும் கலாநிதி இரவீந்திரநாத்தின் பங்கு அளப்பரியது. 2004ம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு தற்காலிக துணை வேந்தர் ஒருவர் தேவைப்பட்டபோது எவருமே முன்வராத நிலையில் துணிந்து தலை கொடுத்தவர். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான  தொடர்புகளை ஏற்படுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்; புலமைப் பரிசில்கள்பெற வாய்ப்புக்களை ஏற்படுத்தியவர். 2002ம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னரான காலகட்டத்தில்; மட்டக்களப்பு மாவட்டத்தின் சகலதுறை அபிவிருத்திக்காக விடுதலைப்புலிகள் அமைப்பினால் பல்கலைக்கழக திணைக்களத் தலைவர்கள் அனைவரும் மாவட்டத்தின் சகல மூலைகட்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது,தானும் கூடவந்து பலவித தகவல்களையும்  திரட்டி,அத்திட்டத்தை அறிக்கை வடிவிலும் தயாரித்து கொடுத்தார். குறிப்பாக பல்கலைக்கழகச் சுற்றாடலில் வாழ்ந்த இளைஞர்களுக்கும், பல்கலைக்கழக ஊழியர்கட்கும் இடையில் சினேக பூர்வமான கிறிக்கற் போட்டிகளை ஏற்படுத்தியவாகளில் இவரும் ஒருவராவார். இப்போட்டிகள் கொம்மாதுறை சுடரொளி விளையாட்டுக் கழக மைதானத்தில் அடிக்கடி நடைபெறும். இவரும் பங்கேற்று விளையாடுவார். கிழக்கிலங்கையில் நற்பணிபுரியும் ஸ்ரீ இராமகிருஷ்ண மிசனுடனும் இணைந்து செயற்பட்டார். சுனாமியின்போது பாதிக்கப்பட்ட அனைவரையும் பல்கலைக்கழகத்தில் தங்கவைத்து,மாணவர்கள் மூலம் அவர்கட்கு தேவையான  உணவு உதவிகள் செய்யவைத்ததோடு,தான் கொழும்பு சென்று மாற்றுவதற்கான உடைகளை கொள்வனவு  செய்துவந்தார் என்பதை மறந்துவிடமுடியாது. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொங்குதமிழ் நிகழ்வுகள்,மாவீரர் நினைவுகள் யாவற்றிலும் பார்வையாளராக இல்லாமல் பங்காளராகியவர். இப்படியாக இவரின் பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
சுமார் முப்பது ஆண்டுகள் இவரின் சேவை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்த நிலையில்  திடீரென அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கின. 2006ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம்திகதி கலை பண்பாட்டுத்துறை பீடாதிபதி பாலசிங்கம் சுகுமாரை இருவர் கடத்திச்சென்று அவரை விடுவதானால் பேராசிரியர் இரவீந்திரநாத் துணைவேந்தர் பதவியில் இருந்து விலக வேன்டும் என்ற நிபந்தனையை வைத்தனர். அவரின் உயிரைக் காப்பாற்ற  ஒக்றோபர் மாதம் 02ம் திகதி தனது பதவியை துச்சமென மதித்து இராஜனாமாகடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவிடம் கையளித்தார். சுகுமார் விடுதலை செய்யப்பட்டார். மானியக்குழு  இராஜனாமாவை ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதியின் முடிவுக்காக அதை அனுப்புவதாகக் கூறி அதன் முடிவு வரும்வரை கொழும்பில் இருந்து பணியை தொடரும்படியும் வலியுறுத்தியது. 15.12. 2006ல் கொழம்பில் உள்ள SLAAS(Sri LankaAssociation for the Advancement of Science) ல் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டார். அங்கிருந்துதான் கடத்தப்பட்டார். அன்றிரவு 9.30 மணியளவில் அவரது மருமகன் பிரபர கண் சிகிச்சை நிபுணர் மலரவன் பொலிசில் மாமாவை கானவில்லை என புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி,எதிர் கட்சித்தலைவாஇ; மந்திரிகளஇ; கட்சித்தலைவர்கள் ,சர்வ தேசகண்காணிப்புக்குழு,இவங்கை கண்காணிப்புக்குழு,ஐக்கியநாடுகள் சபை,மனித உரிமைக்கான ஐ.நா.தூதர் உட்பட இலங்கையில் உள்ள சகல திணைக்கள அதிகாரிகட்குமஇ; தலைவர்கட்கும் ,ஆமி,பொலீஸ் திணைக்களம் உட்பட பலருக்கும்  மனுச் செய்தும் எந்த வித பலனும் கிடைக்கவில்லை.
சர்வதேச மன்னிப்புச்சபை,நோர்வே பல்கலைக்கழகம் உட்பட பலவெளிநாட்டு நிறுவனங்கள் , மதத்தலைவர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தும் எதுவித முடிவும் கிடைக்கவில்லை. இதனால் பேராசிரியரின்  மனைவியும் தாயாரும் நோயாளியாகி விட்டனர். பத்து ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் பேராசிரியரின் நினைவு கூரல் வைபவமொன்று னுநஉ 17ம்திகதி லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது. கடந்த வாரம் கிழக்குப் பல்கலைக் கழக சமூகம் அவரின் சேவையை மறக்காமல் பேராசிரியரை கடத்தியவர்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.