கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது.

அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

பிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.

தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக்கொள்ளலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. இந்த சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இந்திய அணியில் ஷமி இடம் பெற்றிருந்தார்.

வழக்கு மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அதனால், நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

குற்றப்பத்திரிகையை பார்த்தால், விஷயம் எப்படி இருக்கிறது என்பதையும், பிசிசிஐ-யின் சட்டதிட்டத்தின்படி நடவடிக்கை ஏதாவது எடுக்கப்படவேண்டுமா என்பதையும் முடிவு செய்ய முடியும் என்றும் பிசிசிஐ அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தம் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளையும் முகமது ஷமி மறுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஃபேஸ்புக் மூலம் புகார்களை முன்வைத்த அவரது மனைவி, தங்களின் நான்காண்டுகால திருமண வாழ்வில் அவர் பல பெண்களோடு தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டினார். ஷமி பல பெண்களுக்கு அனுப்பியதாக கூறப்படும் மெசேஜ்களை அவர் தமது முகநூல் கணக்கின் மூலம் வெளியிட்டார்.