காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது அரசின் மிக தைரியமான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஜயதசமி நாடு முழுவதும்,கொண்டாடப்பட்டு வருகிறது. நாக்பூரில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது: தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாட்டில் சிலர் வன்முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.
சமூகத்தில் சில அருவருக்க தக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்த தேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்துவதற்காக திட்மிட்டு நடக்கும் சதியாகும்.

2014,2019 லோக்சபா தேர்தலுக்கு பின்னர் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலக அளவில் வளர்ந்திருப்பதை காண முடிகிறது. எல்லையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதம் குறைந்துள்ளது. ஜனநாயகத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்து போக வேண்டும் என்பதல்ல. அதே நேரத்தில் சுயநல நோக்கு இருக்கும் விஷயத்தில் தேசநலனை சமரசம் செய்து கொள்ள முடியாது.

காஷ்மீரில் 370 என்ற சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பாராட்டுக்குரியது. இது மத்திய அரசின் தைரியமான நடவடிக்கை. இதன் மூலம் காஷ்மீர் மக்கள் நன்மை பெறுவர். இவ்வாறு மோகன்பகவத் பேசினார்.