காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால், அரசு பங்களாக்களில் பல காலமாக வசித்து வந்த மாஜி முதல்வர்கள் காலி செய்தே ஆக வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அனைத்து முன்னாள் முதல்வர்களும் தங்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசு பங்களாக்களில் வாடகை ஏதும் செலுத்தாமல் இலவசமாக வசித்து வருகின்றனர்.

இவர்களில் குலாம் நபி ஆசாத் தவிர மற்ற அனைவரும், வாழ்நாள் முழுவதும் அதே வீட்டில் வசிக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அரசு பங்களாக்களை கோடிக்கணக்கில் செலவழித்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.

ஓமர் அப்துல்லாவும், மெகபூபாவும் கிட்டதட்ட தலா ரூ.50 கோடியை தங்களின் அரசு பங்களாவை சீரமைக்க செலவிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகபூபாவின் தந்தையும் முன்னாள் முதல்வருமான முப்தி முகம்மது சையது அரசு பங்களா மட்டுமல்ல நவ்கானில் உள்ள தனது தனிப்பட்ட பங்களாவையும் அரசு செலவில் பெரிய அளவிலான தொகையை செலவிட்டு சீரமைத்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை கூறி ஒமர் அப்துல்லாவும், மெகபூபாவும் அரசு பங்களாக்களிலேயே தங்கி வருகின்றனர். அரசு பங்களாக்களில் வசித்து வந்தாலும், இது தவிர பரூக் அப்துல்லாவுக்கு 2 வீடுகளும், ஒமர் அப்துல்லாவிற்கு ஒரு வீடும் உள்ளது. பதவிக்காலம் முடிந்ததும் மாஜிக்கள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து உ.பி.,யில் மாஜி முதல்வர்கள் தங்களின் அரசு பங்களாக்களை காலி செய்தனர். இருந்தும் காஷ்மீரில் மாஜிக்கள் தொடர்ந்து அரசு பங்களாக்களில் வசித்து வந்தனர்.

தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீர் நிர்வாகம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். இது அமலான பிறகு மாஜிக்கள் அரசு பங்களாக்களில் இதுநாள் வரை அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கையும் பறிபோகும் நிலை ஏற்படும்.