காஷ்மீரில் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது: பிரதமர் மோடி

‘காஷ்மீர், லடாக்கில் இனி பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் மக்களுக்கு மறுவாழ்வு துவங்கியுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். சுமார் 40 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர், லடாக் மக்கள் துயரத்தில் இருந்தனர். நீண்ட நாட்களாக இருந்த அவர்களது துயரம் தற்போது நீங்கி உள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை. அமைதி நிலவுகிறது.

காஷ்மீரில் 370, 35ஏ சட்டப்பிரிவுகளால், வன்முறை, ஊழல், பயங்கரவாதம் தான் வளர்ந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. பயங்கரவாதத்தால் காஷ்மீரில் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். காங்., சட்டங்களால் அங்கு ஒரு சாரார் மக்கள் மட்டுமே பயன் பெற்று வந்தனர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் ஒன்றறை கோடி காஷ்மீர் மக்கள் பயன்பெற போகிறார்கள்.

காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன. 1947 க்கு பிறகு பிற மாநிங்களுக்கு உரிமைகள் கிடைத்தது. மற்ற மாநிலங்களை போல், காஷ்மீர் மக்களுக்கும் இனி சலுகைகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவி தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். எரிவாயு மானியம், கல்விக்கான மானியம், வீட்டு வசதி மானியங்களை இனி காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும். இதுவரை காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும்.

தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், காஷ்மீர், லடாக் உள்ளதால், இனி ஊழலின்றி சிறந்து விளங்கும். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 3 மாதங்களுக்குள் காஷ்மீரில் நிர்வாகம் சீராகும். யூனியன் பிரதேசங்கள் என்பதே தற்காலிகமானதே. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஓட்டுரிமை வழங்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உருவாகும். காஷ்மீரில் விரைவில் தேர்தல், முழு பாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீர், லடாக் உள்ளாட்சி தேர்தல்களில் உங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். கவர்னர் ஆட்சியில் காஷ்மீரில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு சென்ற போது, சாலை வசதிகள், மின்சார வசதிகள் மேம்பட்டிருந்ததை கண்டேன்.

பயங்கரவாதம், பிரிவினைவாதத்திலிருந்து காஷ்மீரை நாம் காப்பாற்ற வேண்டும். காஷ்மீரில் சாதாரண நிலை திரும்புவதால் இனி சினிமா படப்பிடிப்புகளை நடத்தலாம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் இனி படப்படிப்புகளை நடத்தலாம். காஷ்மீர், லடாக்கில் சுற்றுலா துறை மேம்படும். அங்கு தகவல் தொழில்நுட்பம், பிபிஓ சென்டர்களும் உருவாகும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்துவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்துகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும். அந்த மூலிகையின் பயனை உலகமே அனுபவிக்க செய்வோம். காஷ்மீரில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாகி அவர்கள் விருதுகளை வெல்வார்கள். யூனியன் பிரதேசமானதும் லடாக்கை முன்னேற்றமடைய செய்வது மத்திய அரசின் பொறுப்பு. சோலார் மின் உற்பத்தியில் லடாக் தலைசிறந்த பகுதியாக மாறும்.

காஷ்மீர், லடாக்கின் எதிர்காலத்திற்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு துணையாக 130 கோடி மக்கள் உள்ளனர். அவர்களின் உரிமையை யாரும் பறிக்க முடியாது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவர்களும் மாறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில், மாற்றுக்கருத்து உள்ளோரை மதிக்கிறோம். ஆனால் தேச விரோத நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி காஷ்மிரிலும், லடாக்கிலும் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்.

பாக்.,கால் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். ராணுவம், பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் அங்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள். பக்ரீத் பண்டிகையை கொண்டாட அங்குள்ள மக்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. காஷ்மீர், லடாக்கை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்; காஷ்மீரின் வாழ்வு சிறக்கும். அம்மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அது அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.