‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

பிரிட்டனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை இன்று(ஜூன் 7) ராஜினாமா செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்கு பின், அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன. ஆனால், குடியேறும் பிற நாட்டினரால் தங்களின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டனில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியலாமா என பொதுமக்களின் கருத்தைக்கேட்டு 2016 ஜூனில் வாக்கெடுப்பு நடந்தது. இது பிரெக்சிட் எனப்பட்டது. பிரெக்சிட்டுக்கு மக்கள் ஆதரவளித்ததால் பதவி விலகுவேன் என அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார். ஓட்டெடுப்பில் 51 சதவீதம் பேர் பிரெக்சிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சொன்னபடி டேவிட் கேமரூன் பதவி விலகினார். தெரசா மே பிரதமரானார்.

நுாலிழை மெஜாரிட்டி கிடைத்ததால் பிரெக்சிட் பணிகள் துவங்கின. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் 2017 மார்ச் 1ல் தாக்கல் செய்யப்பட்டது. 2019 மார்ச் 29ல் பிரெக்சிட் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பிரெக்சிட் ஒப்பந்ததை பல எம்.பி.,க்கள் எதிர்த்தனர். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களே ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.

மூன்று முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் தோல்வியடைந்ததை அடுத்து, பதவி விலகுவதாக தெரசா மே அறிவித்தார். இந்நிலையில், தெரசா மே இன்று(ஜூன் 7) தனது கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 25 நாட்கள் கட்சியின் தலைவர் பொறுப்பு அவரிடம் இருந்தது. மார்க்ரெட் தாட்சர், டோனி பிளேர், ஜான் மேஜர், டேவிட் கேமரூன் ஆகியோருக்கு அடுத்து அதிக நாட்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மேக்கு கிடைத்துள்ளது. பிரிட்டனின் அடுத்த பிரதமர் தேர்வு செய்யும் வரை, மே, பிரதமராக தொடர உள்ளார்.