காவி வேஷ்டியில் ராகுல் பக்தி பரவசம்

கோவில்கள், மடங்களுக்கு செல்லும் திட்டத்தை குஜராத் சட்டசபை தேர்தலின் போது ராகுல் துவக்கினார். மென்மையான இந்துத்துவா கொள்கையை அவர் பின்பற்றுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனினும் அவரது போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஆண்டு இறுதியில், ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தன்னை சிவ பக்தராகவே மாற்றிக் கொண்டு விட்டார் ராகுல்.

ம.பி., மாநிலத்தில் அடுத்த கட்ட பிரசாரத்தை ராகுல் இன்று துவக்கினார். அதில் ஒரு கட்டமாக, தாதியா மாவட்டத்தில் உள்ள பீதம்பரா பீடம் என்ற மடத்திற்கு சென்றார். வெள்ளை நிற குர்தா, காவி வேஷ்டி அணிந்தபடி ராகுல் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். இந்த மடத்தின் வளாகத்தில் பல கோவில்கள் உள்ளன. அரை மணி நேரம் அங்கு ராகுல் இருந்தார்

அவருடன் காங்., மூத்த தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பலர் சென்று இருந்தனர். 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த இடம் கருதப்படுகிறது. பூஜை முடித்த பிறகு தாதியா நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பங்கேற்றார்.

ராகுல் வருகை குறித்து மாநில காங்., செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது: இந்த இடத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா 1979ம் ஆண்டு தேர்தல் நடப்பதற்கு முன் வந்திருந்தார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வந்தார். 1984 -85ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் ராஜிவ் வந்திருந்தார். மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு, நோய்வாய்பட்டிருந்த போது, மூத்த காங்., தலைவர் கமலாபதி திரிபாதி இங்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.