காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடிதம் எழுதியிருந்தார். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (ஏப்.,18) கடிதம் எழுதியிருந்தார். தற்போது இந்தக் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலடி கடிதம் எழுதியிருக்கிறார்.
அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போட்டியிட முக்கிய ஆயுதமாக தடுப்பூசிகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை உணர்ந்ததால் தான் மத்திய அரசு உலகிலேயே மாபெரும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறது.
இந்தியாவில் 12 கோடி டோஸ்கள் போடப்பட்டு சாதனை படைத்திருக்கிறோம். நீங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். ஆனால் சோகம் என்னவென்றால் உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை. ஒருவேளை அவர்களுக்காக தான் ஆலோசனை வழங்கியிருக்கிறீர்கள் என்று நான் புரிந்துகொள்கிறேன்.
குறிப்பாக, உங்கள் கட்சி மூத்த தலைவர்களில் பெரும்பாலோனோர் தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் திரைமறைவில் சத்தமின்றி அவர்கள் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் (காங்.,) ஆளும் மாநிலங்களில் தான் கொரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகள் பதிவாகின்றன. நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை உங்கள் கட்சித் தலைவர்கள் பின்பற்றினால் வரலாறு அவர்களுக்கு நன்றி சொல்லும். இவ்வாறு பதிலடி தரும் வகையில் கடிதம் எழுதியுள்ளார்.