கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது பற்றி இதுவரை 25 அமைப்புகள் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளன. இவை அனைத்திலுமே தனிப்பெரும்பான்மையாகவோ, கூட்டணி கட்சிகளாகவோ மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்றே கூறப்பட்டுள்ளது.

அப்படி பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா மாநில அரசுகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று ஒரு பேச்சு டில்லியில் அடிபடுகிறது. காங்., அரசுகள் கலைக்கப்பட்டால் காங்.,கிற்கு நிதி கிடைப்பது சிரமமாகி, அக்கட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்று மோடி கணக்குப் போடுவதாகவும் டில்லியில் பேசப்படுகிறது.

2019 தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவற்றில் பெரும்பாலான பணம் காங்கிரசாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருக்கும் பா.ஜ., தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தால், காங்., ஆளும் மாநில அரசுகள் மீது கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான சுசில் சந்திரா, கடந்த ஜனவரி மாதம் வரை நேரடி வரி விதிப்பு வாரிய தலைவராக இருந்தார். அரசியல்வாதிகளின் கறுப்பு பண நடமாட்டத்தை கண்காணித்து வந்தவர். இதனால் தான், தற்போது நிறைய கறுப்பு பணம் கைப்பற்றப்படுகிறது என்கிறார்கள். சோனியா, ராகுல் ஆகியோர் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கை சுசிலும், தற்போதைய நேரடி வரி வாரிய தலைவர் பி.சி.மோடியும் அறிந்து வைத்துள்ளனர்.

இதை எல்லாம் மனதில் வைத்து தான் சுசில் சந்திராவை தலைமை தேர்தல் கமிஷனராக மோடி நியமித்தார். இந்த அதிகாரிகளால் தான் காங்., தலைவர் மற்றும் கமல்நாத் உறவினர்களின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் எடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் 3 மாநில அரசுகளும் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.