கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? – உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

முதல்வர் பழனிசாமியின் அரசுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அதிமுக கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தபோது, பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன. ஆனால், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2, முக்குலத்தோர் புலிப்படை- 1, கொங்கு இளைஞர் பேரவை- 1, சமக-1, இந்திய குடியரசு கட்சி- 1 என 6 தொகுதிகளை மட்டும் கூட்டணிக்கு அளித்தார். ஆனால், இந்த 6 பேரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதில், தமிமுன் அன்சாரி (நாகை), கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்) ஆகிய 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் தொடர்ந்து அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

ஓ.பி.எஸ் பிரிந்து சென்று, முதல்வராக பழனிசாமி பதவியேற்றதும், பெரும்பான்மை நிரூபிக்கும்போதும், பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் அதிமுக கொறடாவின் உத்தரவை ஏற்று அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில் மூன்று எம்எல்ஏக்களும் தற்போது தினகரனுக்கு ஆதரவளித்து கடிதம் அளித்திருப்பதாகவும், அதை கருத்தில் கொண்டே, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரனுக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் உள்ளனர் என தெரிவித்ததாக தினகரன் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், பாஜக பக்கம் நெருங்கியுள்ளதால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு தமிமுன் அன்சாரியும் முதலில் இருந்தே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதால் கருணாஸும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்றும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனியரசு ஆதரவளிக்கலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக 3 பேரும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறியதாவது: தமிழக அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத்திய அரசின் வரம்பு மீறிய தலையீட்டால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களின் கருத்தை அறிந்து உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்.