கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார். இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார். தமக்கு ரூ412 கோடி சொத்து இருப்பதாக அறிவித்து தேர்தலை எதிர்கொண்டவர் வசந்தகுமார்.

அரசியல் மட்டுமில்லாது பிரபல தொழிலதிபராக இருந்தவர். இவர் பிரபல ‘வசந்த் அன் கோ’ நிறுவனத்தை உருவாக்கி அதன் சேர்மனாகவும் இருந்தார். இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மற்றும் நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. அது தவிர ‘வசந்த் டி.வி’ யின் நிறுவனரான இவர் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வந்தார்.

வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த நாளை (ஆக. 29) காலை 8 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் தனது இரங்கல் செய்தியில், ‘ வசந்தகுமார் மறைவை அறிந்து கவலை அடைந்தேன். அவர் அரசியல், தொழில் இரண்டிலும் சிறப்பாக பணியாற்றியவர். தமிழக காங்., மீது மிகுந்த பற்று உடையவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனோ தொற்றால் கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் மறைந்தது அதிர்ச்சியளிக்கிறது – காங்கிரஸ் கொள்கைகள் மீது அவர் கொண்ட அர்ப்பணிப்பு என்றும் நமது இதயத்தை விட்டு மறையாது – ராகுல், இந்திய தேசிய காங்.,

தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘வசந்தகுமார் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார்.உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்திருக்கிறார் எச்.வசந்தகுமார்’ என்று தெரிவித்துள்ளார்..

எம்.பி., வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் மறைவு காங்., கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களின் அன்பை பெற்றவர். வாழ்கை பயணத்தை விற்பனையாளராக தொடங்கி, கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர்.