கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திவருகிறது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் இந்த தொகுதியில் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை அமமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சிறைப்பிடித்தநிலையில் போலீசார் வான் நோக்கிச் ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தனர்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார்.

முன்னதாக திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்னன் வீட்டிலும் பண்ணை வீட்டிலும் 2-3 நாள்கள் வருமான வரித் துறை சோதனை செய்தது. ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடியில் பிரசாரத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக கனிமொழி குறிஞ்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.. இந்த வீட்டில் தான் தற்போது சோதனை நடைபெறுகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை இரண்டு மணி நேரம் வரை நீடிக்ககூடும் என கூறப்படுகிறது. இரவு முழுவதும் சோதனை நீடிக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனிமொழி வீட்டினுள் இருக்கிறார். கனிமொழியிடமும் அவரது உதவியாளர் மற்றும் கட்சியினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.