கனமழை சென்னையில் போக்குவரத்து நெரிசல்; பள்ளி மாணவர்களை முன்னதாக வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வட கிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தென் மேற்கு வங்க கடலில் தமிழகத்தின் அருகே மேலடுக்கு சுழற்சி உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரம் அடையும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அனைத்துப் பகுதியிலும் மழை கொட்டியது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்வோர், பள்ளிக் கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்களில் செல்வோர் அவதிக்கு ஆளாகினர். வடபழனி, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மழை அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மாணவர்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே ரோடுகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.