கனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா

“ பிறைசூடி” ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட கனடாவின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான “கனடா உதயன்” தனது 24 வது ஆண்டில் மிகவும் பெருமையுடனும், அழகாகவும், நேர்த்தியாகவும் எவ்வித குறையும் இன்றி பல் சுவைக் கலை விழாவினை 28-09-2019 சனிக்கிழமை அன்று டொரோண்டோ ஆர்மினியன் இளைஞர் கலை மண்டபத்தில் நடத்தியது. மண்டபத்தை ஓரளவு நிறைத்த பார்வையாளர்கள். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறப்புக் கலைஞர்கள், பேச்சாளர்கள். ஊடக, புகைப்பட, வீடியோ நிபுணர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் மற்றவர்களது செயற்பாட்டில் இருந்து வேறுபட்டு எப்போதுமே தனது நிகழ்ச்சிகளை நடத்துபவர். கர்னாடக இசை, கவின்கலை நிகழ்சிகள், உள்ளூர்க் கலைஞர்களை ஊக்குவித்தல் என்று பலவித நல்ல ஆக்கபூர்வமான பணிகளைத் தொடர்ந்து செய்பவர்.
பல்சுவைக் கலைவிழா மங்கள விளக்கேற்றதுடன் ஆரம்பித்தது. தமிழ்த் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், அக வணக்கம் என்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து வரசித்தி விநாயகர் ஆலய பஞ்சாட்சார குருக்கள் அவர்கள் ஆசி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் உதயன் ஒரு சிறந்த பத்திரிகை என்றும் நட்பின் நாயகனான லோகேந்திரலிங்கம் அடுத்த வருடம் வெள்ளி விழாவை மிகச் சிறப்பாக நடத்த வாழ்த்துவதோடு அது வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து அருமையாக வழங்கிய பி.எஸ். சுதாகரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த நுண்கலைக்கூட அதிபர் வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகள் ரித்திகா, மாயா சகோதரிகள் அழகான வரவேற்பு நடனத்தை அளித்தனர். அதன் பின்னர் அன்றைய முக்கிய இசை நிகழ்ச்சியான “ Musical Blendz” இடம் பெற்றது. இதனை வழங்கியவர்கள் வீணாலயம் இசைக் கல்லூரி அதிபர் திருமதி. ஜெயந்தி ரத்னகுமாரும் அவரது புதல்வி செல்வி பிரியா ரத்னகுமாரும் ஆகும். மிகச் சிறந்த இசை நிகழ்ச்சி இது. பிரியா ரத்ன குமாரின் விரல்கள் வீணையில் நர்த்தனம் ஆடி அனைவரையும் மயங்க வைத்தது. மிகச் சிறந்த வீணை இசையினை அவர் வழங்கினார். பல திரைப் படப் பாடல்களையும் தனிப் பாடல்களையும் கர்னாடக இசையினையும் தனது வீணை என்ற கருவியில் வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றார். அவரது வீணை இசை பிரபல வீணை விற்பன்னர் ராஜேஷ் வைத்தியா அவர்களுக்கு ஒப்பானதாகும். வீணை நிகழ்ச்சியில் மிசால் கொட்வின் அவர்களது நடனமும் கலை அருவி கலைக் கூடத்தின் அதிபர் ரேணுகா விக்னேஸ்வரன் அவர்களது மாணவிகளது ஆருமையான நடனமும் இடம் பெற்றது. இதனை அனைவரும் ரசித்தனர். வீணை இசையும் மற்ற இசைக் கருவிகளும் இந்த நடனம் சிறப்பாக அமைய உதவியது. இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றிய கலைஞர்களை பிரதம விருந்தினர் இன்னிசை வேந்தர் பொன். சுந்தரலிங்கம் அவர்கள் கௌரவித்தார்.
பிரதம அதிதி உரை நிகழ்த்தும் போது ஒரு பத்திரிகையை 24 வருடங்கள் நடத்துவது இலேசான விடயம் இல்லை என்றும் உதயன் கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் லோகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கியும் விமர்சனங்கள் செய்தும் தானே புகைப் படம் எடுத்தும் உதயனில் பிரசுரித்து அந்த நிகழ்வு பற்றி விவரமாகப் பிரசுரிப்பது பாராட்டப் பட வேண்டும் என்றார். அவரது பணி மகத்தானது. தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள் என்று உரைத்தார்.
அன்றைய நிகழ்வில் வளரும் இளம் கலைஞர்களுக்கு முக்கியம் அளிக்கப் பட்டது. இளைஞர் பரபார்வையில் உதயன் என்ற தலைப்பில் பதினோரு வயது சிறுமி ஹம்சா சாந்தகுமார் அனைவரையும் கவர்ந்த ஒரு அருமையான உரை நிகழ்த்தினார். அடுத்து நாட்டிய கலா சேஷ்த்ரா அதிபர் தேனுஜா திருமாறனின் மாணவி திருநீதா சபேசன் ஒரு நடன விருந்தை அளித்தார்.
அடுத்து உரை நிகழ்த்திய மாநகர சபை உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ் உதயன் ஆசிரியரைத் தனக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்றும் ஒரு சிறந்த நண்பர் என்றும் பத்திரிகை ஆசிரியர் மட்டும் அல்ல ஒரு நல்ல பண்பாளரும் என்றும் அவர் தொடர்ந்து பத்திரிகையை நடத்தி தமிழ் மக்களுக்கு நல்ல தகவல்களை வழங்க வேண்டும் என்று உரைத்தார்,
அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒன்டாரியோ மாகாண நிதி அமைச்சரான கௌரவ ரொட்னி பிலிப்ஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவரை நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பாராளுமன்ற உறுப்பினரான மரியராசா மரியம் பிள்ளை அறிமுகப் படுத்தினார். பிலிப்ஸ் அவர்கள் தனது உரையில் உதயனின் பணி மகத்தானது என்றும் பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை நான் அறிவேன் என்றும் 24 வருடங்களாக நடத்துவது பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டு உதயன் ஆசிரியர் சாதித்துள்ளது பாராட்டப் பட வேண்டும் என்றும் உரைத்தார்.
சிறப்பு விருந்தினர் உரையைத் தொடர்ந்து லய பாவ நடனக் கல்லூரியின் அதிபர் கிருபாநிதி ரத்னேஷ்வரன் அவர்களது மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இதனை அடுத்து உரை நிகழ்த்திய உதயன் பிரதம ஆசிரியர் ஆர், என். லோகேந்திரலிங்கம் அவர்கள் உரை நிகழ்த்திய போது பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களையும் தனது பத்திரிகைத் துறை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தனக்கு ஆதரவு தரும் வர்த்தக நண்பர்களுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார். அவரகளது ஆதரவு இன்றி பத்திரிகையை நடத்த முடியாது என்றும் இன்றைய விழாவுக்குப் பல சிறப்பு விருந்தினர்கள் வந்துள்ளமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆரம்பத்தில் இசை நிகழ்ச்சி வழங்கிய Musical Blendz குழுவுக்கு நன்றி கூறியதுடன் தான் கேட்கும் போதெல்லாம் தயங்காது இசை நிகழ்ச்சி வழங்கும் பாரதி கலைக் கூட மதிவாசன் அவர்களுக்குத் தான் மிகவும் கடமைப் பட்டுள்ளதாகவும் உரைத்தார்.
அவரது உரையை அடுத்து சக்தி நர்த்தனாலய அதிபர் திருமதி. ஜனனி ரவிசங்கர் அவர்களின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. மிக அழகிய நடனம் இது. அடுத்து மலேசியப் பாடகர் ரவாங் ராஜா அவர்கள் கரயோக்கி இசையில் பல பாடல்களைப் பாடினார். இவர் சில வருடங்களுக்கு முன்பு உதயன் கலை வில்லாவில் கலந்து கொண்டு தமிழ், சீன மொழிப் பாடல்களைப் பாடி பாராட்டுப் பெற்றவர் என்பது குறிப்பிடப் பட வேண்டியது.
பங்கு பற்றிய கலைஞர்களும் விழா சிறப்புற அமைய உதவிய அனுசரணையாளர்களும் கௌரவிக்கப் பட்டனர். அத்துடன் ஊடகத் துறை நண்பர்களும் கௌரவிக்கப்பட்டனர். கெள்ரவத்தினைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த முனைவர் சங்கரநாராயணன் அவர்களது சிறப்புரை இடம் பெற்றது. இவர் சேலம் கைலாஷ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக முப்பது வருடங்கள் கடமை ஆற்றியவர். ஆறு வருடங்கள் கல்லூரியின் முதல்வராகவும் கடமை புரிந்தவர். உலகின் பல நாடுகளுக்கும் சென்று உரை நிகழ்த்தியவர். இவரை அம்மா நகை மாட அதிபர் கிருஷ்ண கோபால் அறிமுகப் படுத்தினார்.
முனைவர் சங்கரநாராயணன் ஓர் அருமையான சொற்பொழிவினை நிகழ்த்தினார். பல கருத்துக்களையும் நகைச் சுவையுடன் நிகழ்த்தினார். பாரதிதாசனின் பாடல்களில் பலவற்றை மேற்கோள் காட்டியதுடன் மகாகவி பாரதியார் “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ஒன்றுமில்லை” என்று பாடினார் என்றும் அந்தத் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நாம் பெருமைப் பட வேண்டும் என்றார். கவிஞர் கண்ணதாசன் பல திரைப்படங்களில் தமிழன் பெருமை பற்றிய பல பாடல்களை இயற்றி உள்ளார் என்றார். தான் மறு பிறவியில் ஈழத்தில் தான் பிறக்க வேண்டும் என்றும் அங்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் ஈழத்தில் தான் தமிழ் வாழுகிறது, வளர்கிறது என்றும் அதனால் தான் அங்கு மறு பிறவியில் பிறக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று பலத்த கர ஒலியுடன் கூறினார். அத்துடன் ஈழத் தமிழர்கள் தான் பல நாடுகளிலும் தமது மொழியையும் கலைகளையும் வளர்க்கிறார்கள் என்று பாராட்டினார். தந்து உரையில் திருக்குறளில் இருந்தும் மேற்கோள் காட்டினார். பச்சைக் காய்கறிகளைச் சமையல்காரன் சமைத்து உடலைப் பக்குவப் படுத்துவது போல தான் உள்ளங்களைப் பக்குவப் படுத்தும் சமையல்காரன் என்றார். தமிழில் மூன்று எழுத்துக்களில் பல சொற்கள் உள்ளன என்றும் வேறு மொழிகளில் இல்லை என்றும் இது தமிழுக்கே உள்ள சிறப்பு என்றார். மேலும் இலையில் உணவு பரிமாறும் போது எப்படி பரிமாற வேண்டும் என்று விளக்கினார். அத்துடன் கனடா தமிழ் மக்களின் வரவேற்பும். விருந்து உபசாரமும் தன்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது என்றும் அடுத்த வருட வெள்ளி விழா மிகச் சிறப்பாக அமையும் என்றார் .
முனைவரின் உரையை அடுத்து பாரதி கலைக் கூடத்தின் இசை நிகழச்சி இடம் பெற்றது. சூப்பர் சிங்கர் புகழ் சின்மயி அவர்களின் பாடலுடன் இசை நிகழச்சி ஆரம்பித்தது. எமது நாட்டுக் கலைஞர்களே பங்கு பற்றிப் பாடியது குறிப்பிடப் பட வேண்டும். அத்துடன் இசைக் கருவிகளை இசைத்தவர்களும் எம்மவரே. பல இனிய பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர் பாடகர்கள்.
அன்றய பல்சுவைக் கலை விழாவில் டொராண்டோவில் இடம் பெற்ற உலகத் தமிழ் அழகு ராணி போட்டியில் முடி சூடப் பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற அழகுராணிகள் கலந்து கொண்டனர். முதல் இடம் பெற்ற செல்வி தக்ஷினி சிதம்பரப்பிளையும், இரண்டாம் இடம் பெற்ற செல்வி ஐஸ்வர்யா செல்வராஜ் அவர்களும் மூன்றாம் இடம் பெற்ற கமலினி ஜெயக்குமார் அவர்களும் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
உதயன் பல்சுவைக் கலை விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது. பல்வேறு கலைஞர்களை இனம் கண்டு அவர்களை உதயன் விழாவில் பங்கு பெறச் செய்து அவர்கள் தமது திறமைகளை வெளிக் கொணர களம் அமைத்துக் கொடுத்த உதயன் பாராட்டப் பட வேண்டும். விழாவுக்கு வந்த அனைவரும் சிறந்த ஒரு கலை விழாவினைக் கண்ட திருப்தியில் இருந்தனர். அடுத்த வருடம் நிகழ இருக்கும் வெள்ளி விழா மிகச் சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. வெள்ளி விழா சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.