கனடா அமெரிக்கா எல்லை மூடல் – மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு !!

கனடா, அமெரிக்கா நாடுகளுக்கு இடையான எல்லையை ஆக.,21 வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க இரு நாடுகளும் ஒப்பு கொண்டுள்ளன.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. நோய் பரவுதலை கட்டுப்படுத்த கனடா அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக விதிக்கப்பட்ட அவசியமில்லாத பயணங்களுக்கு தடை விதிக்க தயாராக உள்ளன. மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை ஜூலை 21 உடன் முடிகிறது.

மார்ச் முதல் எல்லை அத்தியாவசிய போக்குவரத்து மூடப்பட்டதால், தற்போது 4 வது முறையாக மூடப்பட்டுள்ளது. இந்த தடை வர்த்தகம் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள், எல்லையின் எதிர்பக்கங்களில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் எல்லை தாண்டிய வருகைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று அதிகரிப்பதால், கனடாவின் எல்லையை மூட வேண்டும் என கனடாவின் பல்வேறு மாகாண பிரதமர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதை அடுத்து இந்த புதிய நீட்டிப்பு வந்துள்ளது. அதன்படி, இருநாடுகளிடையேயான எல்லைகளை மூடுவது ஆக.,21 வரையாக மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்துள்ளனர். சமீபத்திய நானோ வாக்கெடுப்பு 80 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த விரும்புவதாகக் கூறுகிறது.

சில பொது சுகாதார அதிகாரிகளும் குறைந்தபட்சம் ஆண்டு இறுதி வரை எல்லை மூடப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர், ஏனெனில் அமெரிக்காவில் கொரோனா தொற்று நோய் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை. இன்றைய நிலவரப்படி, அமெரிக்காவில் 1,34,704 பேர் பலியாகியுள்ளனர். தொற்றுக்கு 32,86,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் கொரோனா தொற்றுக்கு 1,07,590 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 8,783 பேர் பலியானதாகவும் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.