கனடாவில் கொரோனாவால் பலி 6000த்தை தாண்டியது

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 6000 ஐ தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய் அதிகரித்த நாடுகளில் அதிகபட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையிலும், ரஷ்யா அதற்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது. பல ஐரோப்பியநாடுகளில் தற்போது நோய் தொற்று குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கனடாவிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் சற்று கூடிக்கொண்டே செல்கிறது. கனடாவை பொறுத்தவரை, நாட்டில் பல மாகாணங்கள் இருப்பினும், கியூபெக்கில் தான் அதிகபட்ச ( நாட்டின் பாதியளவு பாதிப்பு ) உறுதிசெய்யப்படுவதாக அதிகாரிகளின் தரப்பில் தெளிவாகிறது. இந்நிலையில் கனடாவில், கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக பலியானவர்களின் எண்ணிக்கை 6000 ஐ தாண்டியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், புதிதாக கியூபெக்கில் 578 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய் தொற்றால் 71 பேர் ஒரே நாளில் பலியாகினர். கனடாவில் நோய் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் கியூபெக் மாகாணம் தான் அதிகபட்ச பாதிப்புகளை கொண்டுள்ளது.

நாட்டில் நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,031 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40,776 ஆக உள்ளது. கியூபெக்கில் மொத்த பாதிப்பு 44,775 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,822 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 3,718 ஆகவும் உள்ளது. தொடர்ந்து, கனடாவின் அடுத்தகட்ட பாதிப்புகளுடன் ஒன்ராறியோவில் 390 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.நோய் தொற்றால் மேலும் 43 பேர் பலியாகினர். ஒன்ராறியோ மாகாணத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் 23,774 பேர், குணமடைந்தவர்கள் 18,190 பேர் மற்றும் பலியானவர்கள் 1962 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் அல்பெர்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, நோவா ஸ்கோர்டியா போன்ற பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகர பகுதிகளில் இருந்தும் நோய் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. கனடா முழுவதும் 14,20,000 க்கும் அதிகமானோர் வைரஸால் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு, ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு நிறுவனங்கள் திறப்பது தொடர்பாக கனடா தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.