கட்சி மாறி வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்: அதிமுகவை கரைக்க திட்டமிடுகிறதா பாஜக?

கட்சி மாறி வந்தவர்களுக்குபாஜகவில் முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, முதல்வர் பழனிசாமி – ஓபிஎஸ் அணிகள் இணைப்பு, ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவி என அனைத்தின் பின்னணியிலும் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மட்டுல்லாது, அதிமுக வில் ஒரு பிரிவினரே குற்றம்சாட்டி வருகின்றனர்.

மத்தியிலும், 15-க்கும் அதிகமான மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் 3 சதவீத வாக்குகளுக்குமேல் பெற முடியவில்லை. எனவே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி பாஜகவை பலப்படுத்தும் வேலைகளில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக வில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளும் அதை உறுதிப்படுத்துவதுபோல உள்ளன.

அணிகள் இணைப்புக்கு முன்பாக முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் 5 முறை பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். அணிகள் இணைப்பு நடந்து ஓபிஎஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற அடுத்த நிமிடமே அவருக்கு டிவிட்டரில் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைந்தனர். தவிர, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளை பாஜகவுக்கு இழுக்கும் வேலைகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நயினார் நாகேந்தின் உட்பட பலருக்கு கட்சியில் சேர்ந்த குறுகிய நாட்களிலேயே முக்கியப் பதவிகளை பாஜக வழங்கியுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கு மாநில துணைத் தலைவர், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கார்த்தியாயினி மகளிரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர பாமக, தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த பலருக்கும் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2014-ல் அமித்ஷா தலைவரானதும் தமிழகத்தில் கட்சியைப் பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாகவே திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நடிகருமான நெப்போலியன், முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். தற்போது ஜெயலலிதா இல்லாததால் ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவர்களை பாஜகவில் இணைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

பாஜகவுக்கு சென்றால் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்பதை உணர்த்தி, மேலும் பலரை கட்சியில் சேர்க்கவே, கட்சிமாறி வந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

வியூகத்தை மாற்றிய பாஜக

முதல்வர் பழனிசாமி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிவதால், இனியும் இந்த அரசை ஆதரிப்பது பாஜகவுக்கே ஆபத்தாகி விடும் என தமிழகத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலர் மோடி, அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து வியூகத்தை மாற்றிய பாஜக, அதிமுக அரசுக்கு எதி ரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியுடன் மோடி சந்திப்பு, அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு, சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமானவரித் துறை சோதனை என பாஜக அடுக்கடுக்கான அதிரடிகளில் இறங்கியுள்ளது.

தமிழக பாஜக தலைவர்கள் பலர் முதல்வர், அமைச்சர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பாஜக மேலிடத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அமித்ஷா, தமிழக தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகே பழனிசாமி அரசு ஊழல் மயமாகிவிட்டதாக தொலைக்காட்சி விவாதங்களில் தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

முதலில் அதிமுகவை பலவீனப்படுத்தி அதன் ஒரு பிரிவுடன் கூட்டணி அமைக்க நினைத்த பாஜக, தற்போது அதிமுகவை கரைத்து பாஜகவை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாகவே அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.