கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?

இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ, 2005 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கை அதிபராக பதவி வகித்தார்.

சீனாவைப் பொறுத்த வரையில் அந்நாட்டின் எல்லா விஷயத்திலும், ஆம் அல்லது சரி என்று சீனாவுக்கு சாதகமான ஒரே பதிலையே ராஜபக்‌ஷ சொல்லிவந்தார் என பரவலாக கூறப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கை இதுபற்றி இவ்வாறு கூறுகிறது: “சீனா கொடுக்கும் கடன் மற்றும் அதன் லட்சிய துறைமுக திட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவின் பதில் எப்போதும் ‘ஆம்’ என்றே இருந்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அது நிதர்சனத்திற்கு ஒவ்வாத திட்டம் என்று கூறினாலும், சீனாவின் விருப்பத்திற்கு ‘சரி’ என்ற பதிலையே தெரிவித்தார் ராஜபக்ஷ.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்த சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம்
இலங்கைக்கு தொடர்ந்து கடனுதவி செய்துவந்த இந்தியா, இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மறுத்தபோது, அந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ராஜபக்ஷ சீனாவிடம் ஒப்படைத்தார். ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்தொகை துரிதமாக அதிகரித்தது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, “சீனாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ஹார்பர் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் அம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த துறைமுகத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறாது என்று முன்னரே கூறப்பட்டது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது.”

2015 ல், ராஜபக்ஷ இலங்கையின் ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டாலும், பதவியேற்ற புதிய அரசு, வாங்கிய கடனை செலுத்துவதற்கு திணறுகிறது. கடனை திருப்ப செலுத்த முடியாமல் போனதால், பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சீனாவுக்கு இலங்கை ஒப்படைக்கப்பட்ட பகுதி, இந்தியாவிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ளது என்பது, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை மீண்டும் சீனாவில் இருந்து கடன் வாங்கப் போகிறது. 2018ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த கடன் இலங்கைக்கு கிடைக்கும். 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்த கடனை இலங்கை திருப்பிச் செலுத்தத் தொடங்கவேண்டும்.

பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையின் கருத்துப்படி 2019 முதல் 2022 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் நான்கு பில்லியன் டாலர்கள் அளவிலான வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 2017இல் 55 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1.25 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்து புதிய கடனாக பெறும் இலங்கை, தன்னை, அதனிடம் ஒப்படைக்கப்போகிறது. தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய கடன் வழங்குநராக ஏற்கனவே சீனா உருவாகிவிட்டது.

அம்பந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் பணி முதலில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அதை இந்தியா மறுத்துவிட்டதாக இலங்கை கூறுகிறது.
ராஜபக்‌ஷவுக்கு பிறகும் கடன் வாங்குவதை தொடரும் இலங்கை

இலங்கையின் மத்திய வங்கி, சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண்டா பத்திரங்களை (சீனாவின் மைய வங்கி இதுபோன்ற பத்திரங்களை நேரடியாக வெளியிடுவதில்லை, ஆனால் கண்காணிக்கும் பணியை செய்கிறது) வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

இதைத் தவிர, ஏற்கனவே சீனாவின் வர்த்தக வங்கிகளிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலங்கை கடன் பெற்றுள்ளது. மேற்கத்திய சர்வதேச கடன் வழங்குநர்களைவிட, சீனாவிடம் இருந்து கடன் பெறுவது சுலபமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. நிக்கேய் ஆசிய ஆய்வின்படி, இந்த வார இறுதியில் 50 கோடி டாலர் தொகையை முதல் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச அரசு பத்திரங்கள் (International Sovereign Bond) மற்றும் பிற கடன் வழங்குநர்களிடம் இருந்து பெறும் கடன்களைவிட, இலங்கை சீனாவிடம் இருந்து கடன்களைப் பெறும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஒருபுறம் இப்படியென்றால், மறுபுறத்திலோ, இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு 8.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருப்பதால், அந்நாடு எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு கவனமாக யோசிக்கவேண்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உண்மையில் இலங்கையிடம் இருக்கும் அந்நிய செலாவணி இருப்பில் தற்போது எஞ்சியிருக்கும் பணம், அதன் முக்கியத் தேவைகளுக்கே (இறக்குமதிக்கு செலுத்துவதற்கும், பிற தேவைகளுக்கும்) போதுமானதாக இல்லை.

இலங்கையின் 17 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை, அது 2019 முதல் 2023க்கு இடையிலான காலகட்டத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க டாலர் அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் பாரம்பர்யமான வழியை இலங்கை தேர்ந்தெடுக்கவில்லை என்று அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் இந்திரஜீத் குமாரஸ்வாமி கூறுகிறார். இது வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் சிறந்த வழிமுறை என்று இந்திரஜீத் கூறுகிறார்.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டில் பேசிய குமாஸ்வாமி, “அடுத்த ஆண்டில், கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். எங்கள் கடன் அளவு அதிகமாக இருந்தாலும், நாங்கள் அதை சரியாக நிர்வகிப்போம்” என்று கூறினார்.

87 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட இலங்கையின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகும். இலங்கையின் கடன், அதன் ஜி.டி.பியில் 77% என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

இது, இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்தின் அளவை விட மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தகக்து. மொத்தமாக 55 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில், சீனா 10 சதவிகிதம், ஜப்பான் 12 சதவிகிதம், ஆசிய மேம்பாட்டு வங்கி 14 சதவிகிதம், உலக வங்கி 11 சதவிகிதம் என்ற அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றன.

அதிகரித்துவரும் இலங்கையின் கடன் சுமையானது, அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சீனா வைத்திருக்கும் கடன் பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் கடனை செலுத்த முடியாமல், அதற்கு பதிலாக அம்பாந்தோட்டா துறைமுகத்தை நூறு ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது இந்த அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

சீனாவிற்கு இலங்கையை முற்றிலுமாக திறந்து விட்டதற்கு மஹிந்த ராஜபக்ஷவே காரணமாக கருதப்படுகிறார். 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக பதவியில் அவர் இருந்த காலகட்டத்தில்தான், இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம், புதிய விமான நிலையம், நிலக்கரி மின்நிலையம் மற்றும் சாலை கட்டுமானத்திற்கு என சீனா 4.8 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. 2016ஆம் ஆண்டில் இந்த கடன் 6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துவிட்டது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
அம்பந்தோட்டா துறைமுகம் தொடர்பாக, சீனாவிற்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட்டன
வெளிநாட்டு முதலீடு சொற்பம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நான்கு ஆண்டுகால கூட்டணி அரசின் ஆட்சியிலும் இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு இல்லை என்றே சொல்லிவிடும் அளவிலேயே இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே இலங்கையில் முதலீடு செய்யப்பட்டது.

இலங்கையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை சர்வதேச அளவில் எடுத்துச்சொல்ல அரசு தவறிவிட்டது. தொழில் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 111வது இடத்தில் உள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கடன் வழங்குவதை உத்திரீதியிலான ஆயுதமாக சீனா பயன்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி, தேவைப்படும் நாடுகளுக்கு கடன் கொடுத்து, தனது ஆதிக்கத்தை சீனா செலுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

“சீன அதிபர் ஷி ஜின்பிங், ‘ஒரு பெல்ட் ஒன் ரோட்’ என்ற லட்சியத் திட்டத்தின் மூலம் அண்டை நாடுகளை ஈர்க்கிறார்” என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியிலான தொடர்பு

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு எப்போதும் சுமூகமாகவே தொடர்ந்து வந்துள்ளது. சீனப் புரட்சிக்கு பின்னர், மாவோவின் கம்யூனிச அரசாங்கத்தை அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இலங்கையில் ராஜபக்ஷ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான சண்டை நடைபெற்ற நேரத்தில், சீனா இலங்கையின் நெருங்கிய நாடாக உருவெடுத்தது.

இந்த போரில், மனித உரிமைகள் மீறல் தொடர்பாக, சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டபோது, சீனாவின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.

இலங்கைக்கு அதிக அளவிலான நிதி உதவிகளை சீனா வழங்கியது. இலங்கை மீதான ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, ராணுவ ரீதியாகவும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கியது.

2009இல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகு, ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ராஜபக்ஷவின் மூன்று சகோதரர்கள், இலங்கை அமைச்சரவையின் மீது அதீதமான செல்வாக்கை கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், சீன அரசுக்கும், ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவு மேலும் நெருக்கமானது.

முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், நியூ யார்க் டைம்ஸிடம் கூறியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்: “அம்பாந்தோட்டாவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இலங்கை முதலில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே அணுகியது. ஆனால், அந்த திட்டம் பயனற்றது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் எந்தவிதமான லாபத்தையும் கொடுக்காது என்பதால் அதை இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் அந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது.”