ஓ.பி.எஸ். அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் வெளியேற திட்டம்?

ஓ.பி.எஸ். அணிக்கு 11 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று அந்த அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இது ஓ.பி.எஸ். அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

இதற்கிடையில் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். இந்த நெருக்கடி பற்றி ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து மேலும் 4 பேர் வெளியேற முடிவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சரான முன்னணி எம்.எல்.ஏ., மற்றும் ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்பட 4 பேர் விலக இருக்கும் தகவல் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தெரிய வந்துள்ளது.

அவர்களை பொறுமையுடன் இருக்கும்படி மற்ற நிர்வாகிகள் கூறியும் அவர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓ.பி.எஸ். அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.