ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் அணிகள் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மாறி, மாறி புகார்

இரட்டை மின் விளக்கையும், தொப்பி சின்னத்தையும் முடக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமி‌ஷன் தற்காலிகமாக முடக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘இரட்டை மின் விளக்கு’ என்ற சின்னத்தையும், சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘தொப்பி’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் இ.மதுசூதனன் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் ‘தொப்பி’ சின்னத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்தந்த சின்னத்துக்கு ஆதரவாக அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் திரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் சின்னமான ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்தை பச்சை நிறத்தில் பயன்படுத்துவதாகவும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அவரது அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ. நேற்று ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், ‘தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சின்னத்தையும் முடக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சட்ட ஆலோசகரும், முன்னாள் எம்.எல்.ஏ.யுமான பாபு முருகவேல் நேற்று இரவு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தார். அவர் டி.டி.வி.தினகரன் அணியின் மீது 5 புகார் மனுக்களை அளித்தார்.

இதுகுறித்து பாபு முருகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

இ.மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த கண்ணப்பன் என்ற தொண்டரை, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது மதுசூதனனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுவரும் சுஜாதா மதனகோபால் என்ற பெண் நிர்வாகியை, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. தளவாய் சுந்தரம், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பிரசாரம் செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே, மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.

கடந்த 23–ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த டி.டி.வி.தினகரன் ‘தொப்பி’ சின்னத்தை அணிந்து வந்தார். இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகளோடு கைகோர்த்து அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். விதிமுறைகளுக்கு மாறாக அரசு வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது கோடைகாலம் என்பதால், அனைவரும் தொப்பி அணிவது வழக்கம். இதனை பயன்படுத்தி, டி.டி.வி.தினகரன் அணியினர் அனைவருக்கும் தொப்பி வழங்குகிறார்கள். எனவே, அந்த தொப்பிகளையும் கணக்கிட்டு தேர்தல் செலவில் சேர்க்கவேண்டும். முறைகேடாக சின்னத்தை பயன்படுத்துவதால் தொப்பி சின்னத்தையும் முடக்கவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இருதரப்பு புகார்கள் குறித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் கேட்டதற்கு, ‘புகார்களை பெற்றுள்ளேன். ஆனால், புகாரில் கூறியுள்ள அம்சங்கள் குறித்து நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை’ என்றார்.