ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான கூட்டணி தொடரும்: வாசன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட ஒபிஎஸ் அணியுடனான கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா சென்னை பகுதி மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தியாகராய நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தல், மக்கள் பிரச்சினைகளுக்கு போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியுடன் தமாகா கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி சுமுகமான முறையில் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது. ஆனால், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதற்காக மத்திய அரசிடம் போராட தமிழக அரசு தயங்கி வருகிறது.
டெல்லியில் 40 நாள்கள் விவசாயிகள் போராடியும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொந்தரவுகள் தரப்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் தமாகா போராட்டம் நடத்தும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.