ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையைப் பெற்றிடுவோம்: மாஃபா பாண்டியராஜன்

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம் என்று ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கே.பாண்டியராஜன் கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான நீதி விசாரணை வெற்றி பெற்ற ஒருவாரத்தில் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் இல்லம் புனித நினைவு இல்லமாக மாற்றப்படும்.

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம். இந்த வாக்குறுதிகள் ஆர்.கே.நகருக்கு மட்டுமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவானவை.

மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் இங்கு கொண்டுவரப்படுகிறது. மக்களை தேடி எம்எல்ஏ என்ற அடிப்படையில். வெற்றி பெற்ற 100 நாட்களில் இந்த சேவை தொடங்கப்படும். இதன் படி ஒரு வாகனம் தினசரி தொகுதி முழுவதும் சுற்றி வரும். அதில் மனுக்கள் பெறுதல், அரசு திட்டங்கள் விழிப்புணர்வு, இ-சேவை மையம், ‘மை ஆர்.கே.நகர்’ எனும் செல்பேசி செயலியை நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாகனத்திலேயே பொதுமக்கள் தங்கள் குறையை கூறினால், அதை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நிறைவேற்றப்படும்” என்றார்.