ஓபிஎஸ், ஈபிஎஸ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்: அன்புமணி பேட்டி

சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சேவகர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடிபழனிசாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை துவக்கி வைக்க சென்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”ஈரோட்டில் நடைபெறும் செஸ் போட்டியினை தொடங்கி வைக்க வந்திருக்கிறேன், தமிழக அரசு செஸ் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலும் ஜெயலலிதா வழிப்படி ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு மூடிய டாஸ்மாக் கடைகளை தற்போதைய ஆட்சி திறந்து கொண்டு இருக்கின்றது விரைவில் இதற்காக மக்களை மற்றும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.

நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரட்டும் அதன் பின்னர் அவர் குறித்துப் பேசலாம். ஆறுகளில் மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும், இது தொடர்பாக பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்.

சசிகலாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சேவகர்களாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது ஆளுநருக்கு அழகல்ல, இது மரபுமல்ல, எதாவது புகார் வந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் எந்த அதிகாரியையும் அழைத்துப் பேசலாம். முதல்வர், தலைமைச் செயலாளரையும் ராஜ்பவனில் அழைத்துப் பேசலாம். இந்த அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.

ஆனால் அன்றாட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் பிரதமர் மோடியின் சேவகர்களாக இருக்கின்றனர். ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக சூழல் ஏற்பட்டால் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடலாம்.

தற்போதைய ஜிஎஸ்டி வரிக்குறைப்பு போதுமானதல்ல. கிரைண்டர் உற்பத்திக்கான வரியினை மேலும் குறைக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 5 சதவீதமாக மாற்ற வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.