ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

கனடா என்னும் அற்புதமான தேசத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் அரச இயந்திரத்தை இயக்கும் பிரதான இயந்திரமாக விளங்கும் ஒன்றாரியோ மாகாணம் எம் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் – நான்கு இலட்சத்தைத் தாண்டியவண்ணம்- வாழ்ந்து வருகின்றார்கள் என்று கணக்கீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள்; அரசு சார்ந்த பதவிகளில் அமர்ந்த வண்ணம் எமது இனத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாகாணத்தில் தான் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்னும் தமிழ் பேசும் பெண்மணி, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படடார். ஆவர் பதவி இழந்தாலும் தற்போது ஆளும் லிபரல் கட்சியில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக அந்த தேசிய ஆட்சி மன்றத்தில் அமர்ந்திருக்கின்றார். மேலும் நீதன் சண்முகராஜா என்னும் தமிழ்பேசும் கவுன்சிலர் ஒருவர் இந்த மாகாணத்திற்குள் வரும் ரொரனெரோ மாநகரசபையில் ஒரு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்;று பெருமைப்படுகின்ற அளவிற்;கு எமது தமிழ் மக்களின் பிரசன்னம் எல்லா இடங்களிலும் மிக அதிகளவில் உள்ளது என்பதும் நாம் தலைகளை உயர்த்தியவண்ணம் இருக்க ஏதுவாக அமைந்துள்ளது.

இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட ஒன்றாரியோ மாகாணத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த பக்கத்தில் எமது விரல்களும் சிந்தனைகளும் மூழ்கியிருந்தபோதுதான் அந்த மாற்றம் நிகழ்ந்த செய்தி வேகமாய் பரவியது. ஆமாம்! கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் அமர்ந்திருந்த லிபரல் கட்சியை வீழ்த்திவிட்டு ஒன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் கட்சியியை ஆட்சியை அமர்த்தியிருக்கின்றார்கள் இந்த மாகாண மக்கள். எண்ணிக்கை அதிகளவு மத்திய தர மக்கள் வாழ்ந்து வரும் இந்த மாகாணத்தில் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் மிக அதிகமாகவே இருந்தன.

லிபரல் கட்சியின் ஆட்சியில் பல அதிகார துர்பிரயோகங்களும் நிர்வாகச் சீர்கேடுகளும் இடம்பெற்றதாக முன்னைய எதிர்க்கட்சிகளாக இருந்த கொன்சர்வேர்ட்டிவ் கட்சியும் என்டிபி கட்சியும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தமையும், அவைகளுக்கு சரியான பதிலைத் தராமல் இருந்த வண்ணம் மேற்படி இரண்டு கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுதலித்து நின்ற கெத்தலின் வின் தலைமையிலான லிபரல் கட்சி நேற்றைய தேர்தலில் மிகவும் அடி மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்;டுள்ளது. இந்தச் முக்கிய பக்கத்தை நாம் நிரப்பிக்கொண்டிருந்த போது அந்தக் கட்சிக்கு அந்தஸ்த்து பெற்ற எதிர்க்கட்சியாக கணிக்கப்படுகின்ற அளவிற்கு குறைந்து எட்டு ஆசனங்கள் கிடைக்காமல் தடுமாறிய வண்ணம் உள்ளது.
இவ்வாறு தற்போது ஒன்றாரியோ ஆட்சி மன்றத்தை கைப்பற்றியுள்ள கொன்சர்வேர்ட்டிவ் கட்சியானது அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சியாக பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. இந்த பிரகாசத்தினால் அந்தக் கட்சிக்கு வாக்களித்த மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு காத்திருப்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ள கட்சியின் தலைவர் டக் போர்ட் அவர்களுக்கு முன்பாக பாரிய பொறுப்புக்கள் பெட்டி கட்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு முகங்கொடுத்து தனது சக அங்கத்தவர்களோடும் அமைச்சர்களோடு இணைந்து மக்களின் தேவைகளைக் கவனிக்க வேண்டியது புதிய அரசுக்கு உள்ள மிகப் பெரிய கடமையாகவே நாம் பார்க்கின்றோம்.

புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சர்pபில் மூன்று தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அவர்களில் ஒருவர் திரு லோகன் கணபதி ஆவார். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வகையில், ஏற்கெனவே தனக்குள்ள உள்ள ஒரு சாதயை இரட்டிப்பாக்கியுள்ளார். கனடாவில் ஒரு நகரசபை அங்கத்தவராக மார்க்கம் மாநகர சபைக்கு தெரிவான அவர், கனடாவில் முதன் முதலாக உள்;ராட்சி மன்றம் ஒன்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் என்ற பெருமை அவருக்கு ஏற்கெனவே இருந்தது. தற்போது இந்தத் மாகாண அரசிற்கான தேர்தலில் வெற்றி பெற்ற வகையில் மாகாண அரசில் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இரு தமிழரகளில் ஒருவர்; என்ற பெயரையும் இவர் பெறுகின்றார். திரு லோகன் கணபதியின் புதிய வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்த வேளையில், அவரோடு, மாகாண பாராளுமன்ற உறுப்பினரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு விஜய் தணிகாசலம் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.