ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்டையார்பேட்டை பகுதியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவருடன் நடிகை லதா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், வடசென்னை ஜெ. பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் சென்றனர்.

பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

வழிநடத்தி செல்கிறார்கள்

ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் விடை தெரிய வேண்டும் என்றால், மதுசூதனனை வெற்றிபெற செய்ய வேண்டும். எங்கள் சின்னத்தில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இந்த 2 விளக்குகளும் ஒளிவிளக்காய் இருந்து எங்களை வழிநடத்தி செல்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, மின்சாரம், குடிநீர் பிரச்சினை இருந்தது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. அதன் பின்னர் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி ஏற்பட்ட உடன் தமிழகம் வளம் பெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுக்கிறார்கள் என கேள்விப்பட்டோம். ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் பாசத்துடன் உங்களை சந்திக்க வருகிறோம். மற்றவர்கள் பணத்துடன் வருகிறார்கள். முடிவில் பாசம் தான் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

சி.பி.ஐ. விசாரணை

மதுசூதனன் பேசும்போது, “நான் வெற்றி பெற்ற உடன் ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்கப்படும். போயஸ் கார்டனில் உள்ள சசிகலா குடும்பத்தை விரட்டி அடிப்போம். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லம் ஆக்குவோம்” என்றார்.

நடிகை லதா பேசுகையில், “தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கின்ற தேர்தல் இது. பணமா? பாசமா? என்ற போட்டியில் எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.