ஒரே நாளில் 100ஐ கடந்த பாதிப்பு சீனாவில் மீண்டும் வைரஸ் அச்சம்

சீனாவில், மூன்று மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம், 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனால், வைரஸ் குறித்த அச்சம், சீன மக்களிடையே மீண்டும் பரவியுள்ளது.

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், அண்டை நாடான சீனாவின், ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில், கடந்த டிசம்பரில் உருவானது. யாரும் பலியாக வில்லைபின், அந்நாட்டில் வைரஸ் பரவல் வேகம், கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின், சீனாவில் நேற்று முன்தினம், உள்நாட்டில், 98 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த மூவர் என, 101 பேரிடம், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாட்டின் வடமேற்கில் உள்ள, ஜின்ஜியாங்கின் தலைநகர் உரும்கியில், 89 பேரிடமும், வடகிழக்கு சீனாவின், லியோனிங் மாகாணத்தில் எட்டு பேரிடமும், பீஜிங் நகராட்சியில் ஒருவரிடமும் தொற்று உறுதியானது. வைரஸ் பாதிப்பால், நேற்று முன்தினம், யாரும் பலியாகவில்லை. லியோனிங் மாகாணம் டாலியன் நகரில், கடந்த வாரம் ஒருவரிடம் வைரஸ் தொற்று உறுதியான நிலையில், தற்போது, 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நிலைநேற்று முன்தின நிலவரப்படி, டாலியனுடன் தொடர்புடையவர்கள் வாயிலாக, பீஜிங் உள்ளிட்ட ஒன்பது நகரங்களில் வைரஸ் பரவியுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களுடன், சீனாவில் தற்போது, 482 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில், 25 பேரின் நிலை, மிக மோசமாக உள்ளது. சீனாவில், மீண்டும் அதிக அளவில் தொற்று கண்டறியப்படுவதால், வைரஸ் பரவலின் இரண்டாவது நிலை உருவாகிஉள்ளதாக, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.