ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை

பரதன் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில்,நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.  இந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும்,சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது.  சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் ‘யார்ரா யார்ரா இவன்… ஊரைக் கேட்டா தெரியும்’ பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.    டீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு அடிக்கும் காட்சி,தோளில் பை ஒன்றை தொங்கப் போட்டுவிட்டு பைக்கில் விஜய் வரும் காட்சி,கத்தியை கையில் வைத்து சுழற்றும் காட்சி,எதிரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவனுக்கே குறி வைப்பது,பாடல் காட்சியில் சிலம்பம் சுற்றுவது என விஜய்க்குண்டான மாஸ் காட்சிகள் எல்லாம் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.      அதேபோல்,‘தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் ‘அல்லு’ அதிகமா இருக்கணும்’ ‘இன்றைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று என்கிட்ட இருக்கு’ என்று டீசரில் விஜய் பேசும் வசனங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தத்தை எகிறவிடும். மொத்தத்தில் இந்த டீசர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.     முதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தால்கள். ஆனால்,இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.    இந்நிலையில்,இன்று காலை 10.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. தற்போது இந்த ஆண்டிலேயே விஜய்யின் ‘பைரவா’ படத்தின் டீசரும் பெரிய சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.