ஒரு வருட சம்பளத்தை கொடுக்கிறார் நவீன்பட்நாயக்

போனி புயலால் பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில முதல்வர் நவீன்பட்நாயக் ஒரு வருட சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளார்.

சமீபத்திய புயலால் ஒடிசா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்கள் பல சேதமுற்றுள்ளன. பெட்ரோல் பம்ப், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

5 ஆயிரத்து 791 பள்ளிகள் சேதம். புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஒடிசாவுக்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் மாநில அரசு சார்பில் 17 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது.
மாநில அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சேத விவரம்:

01. லட்சக்கணக்கானோர் மின்சாரம் இன்றியும் குடிக்க தண்ணீர் இன்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

02. 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புரியில் மட்டும் 21 பேர் பலி

03. புரியில் பலத்த காயத்துடன் 160 பேர் மருத்துவமனையில் அனுமதி

04. வங்கி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

05. மொத்தம் 5 ஆயிரத்து 791 பள்ளி கட்டடம் இடிந்துள்ளது.

இந்நிலையில் மாநில முதல்வர் நவீன்பட்நாயக் தனது ஒரு ஆண்டு சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிட முடிவு செய்துள்ளார். ஒடிசாவில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும், சர்வதேச தரத்திலான சீரமைப்பு பணிகள் நடக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.