ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்த நாடுகள் அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை. 3.4 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட, வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்து, பாதுகாப்புக் கவசங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, தற்போது அதிகளவில் ‘என்95’ ரக முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு உடைகளைத் தயாரித்து, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.சீனாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், தலா 200 கோடி முகக் கவசங்களை கேட்டு முன்பணம் கொடுத்துள்ளனர். ஆனால், ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட கூடுதல் பணம் கொடுத்து, முகக்கவசங்களை அமெரிக்கா வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ், ‘நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகக்கவசங்களுக்கு பாதி விலை கொடுத்திருந்தோம். அமெரிக்கா, மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் அனைத்தையும் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் ஈட்ட முயற்சிக்கிறது’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் தெரிவித்துள்ளதாவது:
சீனாவில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் தாய்லாந்து வழியாக ஜெர்மனிக்கு வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, தாய்லாந்தில் விமானம் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளது. இது ஒரு வகையான நவீன திருட்டு; இதைக் கடல் கொள்ளையாக நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது.இவ்வாறு அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

‘இதுபோன்ற செயல்களில் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை’ என, பாரிசில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த செயலை பலரும் கண்டித்து வரும் நிலையில், ‘ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு, கூடுதல் விலை கிடைத்ததும், வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா தான், துயரத்திலும் லாபம் ஈட்டும் நாடாக இருக்கிறது’ என, பல்வேறு தரப்பினரும், சீனாவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.