ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன்தான்: மும்பை வெற்றி குறித்து சச்சின் நெகிழ்ச்சி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் புனே அணி கோப்பையை தவற விட்டது. புனே அணி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைபிடித்ததால் தோல்வி தழுவியது.
பொதுவாக பிட்ச் மந்தமாக இருக்கும் போது, ரன்கள் வர கடினம் என்று உணரும்போது, புதிய பேட்ஸ்மென் நிச்சயம் தடுமாறுவார் என்று புரியும் போது ஸ்மித், ரஹானேயின் அணுகுமுறை கேள்விக்குறியதாக அமைந்தது.
புனே அணி தாக்குர், லாக்கி பெர்குசன் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் போது, அதுவும் தாக்குர் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத்திருக்கும் போது 18-வது மற்றும் 20-வது ஓவரை டேனியல் கிறிஸ்டியனிடம் கொடுத்தது பெரும் தவறாக முடிந்தது இந்த 2 ஓவர்களில் கிறிஸ்டியன் 27 ரன்களை வாரி வழங்கினார். க்ருணால் பாண்டியா இந்தத் தவறை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். புரிதலுடன் கேப்டன்சி செய்திருந்தால் 79/7 என்று தடுமாறிய மும்பையை 100 அல்லது அதற்கு முன்பாகவே சுருட்டியிருக்க முடியும்.
இந்நிலையில் வெற்றி குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்: பிரமாதம், சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் பிரமாதமான ஆட்டம். பிரேக்கில் நாங்கள் கூடி விவாதித்தோம். மகேலா ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார். அதை நான் இங்கு திரும்பவும் கூற விரும்பவில்லை. சரியாகச் சிந்திக்க வேண்டும் அதைச் செய்தால் ஆட்டத்திறனை நிகழ்த்திக் காட்டுவது தானாகவே பின் தொடரும். நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்பினோம், ரோஹித்தும் அணி உறுப்பினர்களும் இதைத்தான் செய்தனர்.
எப்போதும் இந்த மகாவாக்கியத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு: “ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன் தான்”. மலிங்கா யார்க்கர்களுக்கு பெயர் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் மும்பை அணிக்கு தனது ஆட்டத்தை நிரூபித்து வருகிறார். இறுதிப் போட்டியிலும் அவர் நிச்சயம் பிரமாதமாக ஆடுவார் என்று கருதினேன். அவர் இந்த சீசன் வழக்கமாக அமைவது போல் அமையவில்லை. ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் என்றால் அது மலிங்காதான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
பும்ரா: தோனி விக்கெட் மிக முக்கியமானது, இத்தகைய சூழ்நிலையில் அவர் அபாயகரமான வீரராவார்.
ராயுடு: நான் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை, ஆனால் ஸ்மித்திற்கு அந்தக் கேட்சை எடுத்தது என்னை விட்டு அகலாது.