ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல். ராகுல், சாம் குர்ரான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் கே.எல். ராகுல் 15 ரன்களும், சாம் குர்ரான் 20 ரன்களும், அடுத்து களமிறங்கிய மயாங்க் அகர்வால் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக சர்பிராஸ் அகமது உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தால் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் சர்பிராஸ் அகமது 39 ரன்களும், டேவிட் மில்லர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர் சொற்ப ரன்னில் வெளியேற அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக மோரிஸ் 3 விக்கெட்டுகளும், ரபடா, லமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் டெல்லி அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷா, ஷிகார் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பிரித்வி ஷா முதல் பந்திலே அஸ்வினால் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஓரளவு ரன் சேர்த்தநிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும், ஷிகார் தவான் 30 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக ரிஷப் பாண்ட், கோலின் இன்கிராம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியில் அதிரடி காட்டிய ரிஷப் பாண்ட் 39(26) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கிரிஸ் மோரிஸ் (0) ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இன்கிராம் 38 ரன்களும், ஹர்ஷத் பட்டேல் (0) ரன் ஏதும் எடுக்காமலும், ஹனுமா விகாரி 2 ரன்னிலும், ரபடா, லமிச்சானே (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். முடிவில் சாம் குர்ரான் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இறுதியில் அவேஷ் கான் 4 ரன்கள் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சாம் குர்ரான் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில்ஜோய்ன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.