ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதில் பிரித்வி ஷா 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய கொலின் இங்கிராம் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கீமோ பால் டக் அவுட்டானார்.

பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தவான் அரை சதம் அடித்து அசத்தினார். பின்னர் தவான் 51 ரன்னில் வெளியேறினார்.  இறுதியில் அக்‌ஷர் பட்டேல் 9 ரன்களும், ராகுல் திவேதியா 11 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 ரன்களும், ரிஷப் பாண்ட் 25 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளும், சாஹர், ஜடேஜா, தாஹிர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ராயுடு 5(5) ரன்னில் வெளியேற, அடுத்ததாக சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். வாட்சன், ரெய்னா ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. அப்போது அதிரடியில் கலக்கி கொண்டிருந்த ஷேன் வாட்சன் 44(26) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ரெய்னா 30(16) ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்நிலையில் கேதர் ஜாதவுடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றது. முடிவில் வெற்றிபெற 2 ரன்கள் தேவைப்பட்டநிலையில் கேதர் ஜாதவ் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதியில் பிராவோ 4(3 ) ரன்களும், டோனி 32 (35) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன் 44(26) ரன்களும், டோனி 32 (35) ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, ரபாடா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். முடிவில் சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.