ஐ.நா. வாக்குறுதியில் விசாரணைக் காலத்தை அரசு கூறவே இல்லை! ஹர்ஷ டி சில்வா

போர்க்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் இந்த விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு .நாவுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இன்று ஜனநாயகம் அமைந்துள்ளது.

இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே இன்று இலங்கைக் குடிமக்கள் நடத்தப்படுகின்றனர்.

இந்த மாற்றத்தை சர்வதேச சமூகம் அவதானித்து வருவதால் அவை எம்முடன் கைகோர்த்துக் கொண்டு செயற்படுகின்றன.

மஹிந்தவின் ஆட்சியில் இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

அது தொடர்பில் 2015 இல் .நாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நாம் இணை அனுசரணை வழங்கினோம்.

இதை வைத்துக் கொண்டு நாம் படையினரைத் தண்டிக்கப் போவதாக மஹிந்த அணியினர் பரப்புரை செய்து வருகின்றனர்.

நாம் ஒருபோதும் படையினரைக் காட்டிக் கொடுக்கமாட்டோம். அவர்கள் இந்த நாட்டுக்குப் பெற்றுத் தந்த போர் வெற்றிக்காக நாம் அவர்களை மதிக்கின்றோம்.

கடந்த .நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் ஆணையாளர் செயித் அல்ஹுசைன் வெளியிட்ட அறிக்கையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மஹிந்த அணியினர் பரப்புரை செய்கின்றனர்.

அந்த அறிக்கையின்படி நாம் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போகின்றோம் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அறிக்கை வேறு. தீர்மானம் வேறு. அறிக்கைகளால் எதுவும் செய்ய முடியாது.

சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் தெளிவாக அறிவித்ததன் பின்னும் இவர்கள் பரப்புரை செய்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக .நா. எமக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

அந்த இரண்டு வருஇடங்களுக்குள் இவற்றையெல்லாம் செய்து விடுவோம் என்று .நாவுக்கு வாக்குறுதி வழங்கிவிட்டு நாம் இந்த அவகாசத்தைப் பெறவில்லை.

இவை தொடர்பில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து இரண்டு வருடங்களின் பின் .நாவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கே எமக்கு இந்த இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.