ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ‘ஜாமின் இல்லை!’

சிதம்பரம், 74, மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், இந்த முறைகேட்டில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ம் ஆண்டில், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற, விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, காங்கிரசின் மன்மோகன் சிங் பிரதமராகவும், சிதம்பரம் நிதி அமைச்சராகவும் இருந்தனர்.

நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அன்னிய முதலீட்டு வாரியம், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டின் அடிப்படையில், இந்த அனுமதியை அளித்ததாக கூறப்பட்டது. இதற்காக, கார்த்திக்கு சொந்தமான நிறுவனங்கள் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தின. இந்த வழக்கில் சிதம்பரம், ஆகஸ்ட், 21ல், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், அவருக்கு உச்ச நீதிமன்றம், ஏற்கனவே ஜாமின் அளித்துள்ளது. அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால், 80 நாட்களுக்கு மேலாக, அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனு, நீதிபதி சுரேஷ் கைட் முன், டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி உத்தரவிட்டதாவது: இந்த வழக்கில், சி.பி.ஐ., ஏற்கனவே சில தகவல்கள், தடயங்களை சேகரித்துள்ளது. ஆனால், இதில் நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கை விசாரித்த அமலாக்கத் துறையினர் சேகரித்துள்ள தடயங்கள், அதிலிருந்து வேறுபட்டவை; தனித்துவம் வாய்ந்தவை.

இது, பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு. பொருளாதார குற்றங்களால், ஒட்டு மொத்த சமுதாயமே பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்ற வழக்கில், ஒருவருக்கு ஜாமின் அளித்தால், அது தவறான முன் உதாரணமாகி விடும். எனவே, சிதம்பரத்தின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு, ஜாமின் அளிப்பது என்பது, சட்ட நடைமுறை என்பதையும், அதில், சிறை என்பது விதிவிலக்கு என்பதையும் உணர்ந்து உள்ளேன். ஆனால், இந்த வழக்கில், சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மிக கடுமையானவை. இந்த முறைகேட்டில், அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் ஜாமின் அளித்து, தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்த முடியாது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சிதம்பரம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.