ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். தோனி முதன்முறையாக கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார்.
முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.
4 ஓவர்களில் மும்பை அணி 41 ரன்கள் குவித்த நிலையில் இம்ரன் தகிர் வீசிய 5-வது ஓவரில் பார்த்தீவ் படேல் (19) ஆட்டமிழந்தார். 7-வது ஓவரில் இம்ரன் தகிர் மேலும் இரு விக்கெட்கள் கைப்பற்றி மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத் தார்.
அவரது பந்தில் ரோஹித் சர்மா 3 ரன்களில் போல்டானார். சிறப்பாக விளையாடி வந்த ஜாஸ் பட்லர் விக்கெட்டையும் இம்ரன் தகிர் கைப்பற்றினார். அவர் 19 பந்துகளில், தலா 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களமிறங்கிய ராணா 34, அம்பாட்டி ராயுடு 10, கிருனால் பாண்டியா 3 ரன்களில் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர். 16 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களே எடுத்திருந்தது. இதன் பின்னர் களமிறங்கிய பொலார்டு 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அசோக் திண்டா வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் விளாசி மிரட்டினார். அவர் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புனே அணி தரப்பில் இம்ரன் தகிர் 3, ரஜத் பாட்டியா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து 185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த புனே அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அஜிங்க்ய ரஹானே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 54 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக விளையாடிய தோனி 12 ரன்கள் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 21, மயங்க் அகர்வால் 6 ரன்கள் சேர்த்தனர்.