ஐந்து துணை முதல்வர் பதவிகள் தி.மு.க கூட்டணிக்கு – கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், தி.மு.க.,வில், துணை முதல்வர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க, கூட்டணி கட்சிகள் சில திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க.,வில், யார் முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்னை, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே மோதலாக வெடித்தது.அக்கட்சி இரண்டாக பிளவுபடப் போகிறது என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., ஏகமனதாக அறிவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, முரண்டு பிடித்து வந்த பா.ஜ., கட்சி, ‘மீண்டும் அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்போம்’ என, அறிவித்து விட்டது. ஆனால், தி.மு.க., கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதை, கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்’ என, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்து விட்டன.

மேலும், ‘தி.மு.க., கூட்டணியில், எங்களுக்கு கவுரவமான தொகுதி பங்கீடு வேண்டும். ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்தால், ௨௦௧௬ல், உருவான மக்கள் நலக் கூட்டணி மீண்டும் மலரும்’ என, கூட்டணி கட்சிகள் மறைமுகமாக எச்சரித்துள்ளன.அதன் பின்னரே, ‘கூட்டணிக்குள் குழப்பம் இல்லை’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இறங்கி வந்து, அறிக்கை வெளியிட்டார். இந்த ஒட்டு வேலை தற்காலிகம் தான். தி.மு.க., கூட்டணியில், நாளுக்கு நாள் பல்வேறு பிரச்னைகள் முளைவிட துவங்கி உள்ளன.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தொகுதி பங்கீடு, விரும்பிய தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி, கூட்டணிக்குள் பா.ம.க., வருவது போன்ற விவகாரங்கள், தி.மு.க., தலைமை மீது, கூட்டணி கட்சிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளன. இந்த சந்தேகங்கள், கூட்டணிக்குள் புயலை கிளப்பும். லோக்சபா தேர்தலில் இருந்த கூட்டணி, சட்டசபை தேர்தலுக்கு தொடருமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஐந்து துணை முதல்வர்கள் செயல்படுகின்றனர். அதுபோல, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், ஸ்டாலின் தலைமையில், ஐந்து குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கவும், அக்கட்சி மேலிடம் ஆலோசித்துஉள்ளது.

ஆனால், அந்த ஐந்து துணை முதல்வர்கள் பதவிகளில், ஒன்றிரண்டை கூட்டணி கட்சிகள் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளன இதனால், துணை முதல்வர் பதவியை விரும்பும் கூட்டணி கட்சிகள், 2016ல் உருவான மக்கள் நலக் கூட்டணி பார்முலாவை காட்டி, தி.மு.க.,வை ஆட்டி வைக்க திட்டமிட்டுஉள்ளன. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.