ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிப்பு

இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட சஜித் பிரேமதாஸவிற்கு, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறங்குகின்றார்.

2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் ஐக்கிய தேசியக் கட்சி பொது வேட்பாளருக்கே ஆதரவை வழங்கியிருந்தது.

தற்போதைய அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக கடமையாற்றிய வரும் சஜித் பிரேமதாஸ, இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வராவார்.

கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு, கட்சியின் தலைமையுடன் சஜித் பிரேமதாஸ பெரும் மோதல்களில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், பல நிபந்தனைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸவிற்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், சஜித் பிரேமதாஸ அந்த நிபந்தனைகளை பகிரங்கமாகவே நிராகரித்திருந்தார்.

யார் இந்த சஜித்?

இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும், ஏமா பிரேமதாஸவிற்கும் புதல்வராக 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சஜித் பிரேமதாஸ பிறந்தார்.

ஆரம்ப கல்வியை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் தொடர்ந்த சஜித் பிரேமதாஸ, தனது மேல்நிலை கல்வியை லண்டனில் படித்தார்.

சஜித பிரேமதாஸ, ஜலனி பிரேமதாஸவை திருமணம் செய்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 2001ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, 2001முதல் 2004ம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்து அரசாங்கத்தில் சுகாதார பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ, 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக கடமையாற்றி வரும் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்குவதற்கு அந்த கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.