ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு ஜூலை 10ந்தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதில், ஜூலை 10ந்தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனு மீது அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.3,500 கோடி அளவிலான ஏர்செல் மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்க துறை இயக்குநரகம் முன்பே விசாரணை நடத்தி விட்டது.

இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் ப. சிதம்பரம் அமலாக்க துறை இயக்குநரகத்தின் முன் ஆஜராகிறார். இந்நிலையில் அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதற்கு முன் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதனால் புதிய சம்மன்கள் அமலாக்க துறை இயக்குநரகம் மற்றும் சி.பி.ஐ.யால் அவருக்கு அனுப்பப்பட்டன. அவர் இன்று ஆஜராகி அளிக்கும் வாக்குமூலம் பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.