எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது: டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

டெல்லியில் நடந்த விழாவில் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான 2016-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

சந்தியா பதிப்பகம் வெளியிட்ட ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் பிறந்த சி.கல்யாணசுந்தரம் எனும் இயற்பெயர் கொண்டவர் வண்ணதாசன். இவர், கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகள் இதுவரை 12 நூல்களாகவும், கவிதைகள் 5 நூல்களாகவும் வெளிவந்துள்ளன. கலைமாமணி, இலக்கிய சிந்தனை, விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

இவரது 15 சிறுகதைகள் அடங்கிய ‘ஒரு சிறு இசை’ என்ற நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்த சிறுகதை தொகுப்புக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி பங்கேற்று, வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கினார். இவருடன் மேலும் 23 எழுத்தாளர்களுக்கு காகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற வண்ணதாசன், தமிழின் மூத்த மார்க்சிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.