எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!

எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

சீனா இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடக்கிறது. மேலும் எல்லையில் சீன ராணுவத்தினர் அதிகளவில் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பிரச்னையை தீர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் பேசுகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு சிக்கிம் எல்லையில் நகு லா என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் நடந்ததாக தெரிகிறது. இதில் சீனா தரப்பில் 20 வீரர்கள் காயமடைந்ததாகவும், இந்திய தரப்பில் 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு வீரர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் உலவுகிறது. ஆனால் அது இப்போது நிகழ்ந்ததா என உறுதியாக தெரியவில்லை.

இதனிடையே எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறிய சம்பவமும், இந்தியா பதிலடி கொடுத்த சம்பவமும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த விஷயம் டுவிட்டரில் #Indian and Chinese, #20 Chinese, #Naku La ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின. பலரும் இந்திய வீரர்களின் செயலுக்கு பாராட்டும், அவர்களின் தைரியத்தை போற்றியும் புகழ்ந்து வருகின்றனர். சிலர், சீனா இதுபோன்று அடிக்கடி அத்துமீறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். அதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் எல்லையில் சீனா வாலாட்டினால் உடன் பதிலடி கிடைக்கும், ஜெய்ஹிந்த் என கருத்து பதிவிட்டுள்ளனர்.