எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம்: ஸ்டாலின் பேச்சு

இலங்கை தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும் எனவும், குடியுரிமை சட்டம் பற்றியே தெரியாமல் அதை முதல்வர் ஆதரிக்கிறார் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் வரும் டிச.,23ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக.,வின் கூட்டணி கட்சிகள் மற்றும் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், கொளத்தூரில் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இல்லாவிட்டலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சி திமுக. இலங்கை தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும். திமுக.,வின் பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட நினைப்பவர்கள் இப்பேரணியில் கலந்துகொள்ளலாம். பேரணிக்கு பிறகும் மத்திய அரசு இறங்கி வரவில்லை எனில் தமிழகமே சந்திக்காத வகையில் பெரிய போராட்டம் நடக்கும். இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்களுக்கு இடமில்லை எனக்கூறும் குடியுரிமை சட்டத்தை பற்றி தெரியாமல், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை என்பது தான் எங்களின் இலக்கு என முதல்வர் கூறுகிறார். அதை பற்றி தெரியாமல் சட்டத்தை ஆதரிக்கிறார்.எதற்கெடுத்தாலும், திமுக பொய் சொல்லி தான் ஓட்டு வாங்கியது என கூறுகிறார். ஆனால் யார் பொய் சொல்கிறார்கள் என விரைவில் தெரியவரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.