என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியை டெல்லி அணி வீழ்த்தக் காரணமாயிருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடி சதம். இந்த முக்கியமான சதம் அடித்த நாள் தன் வாழ்நாளின் சிறப்பான நாள் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் 62 பந்துகளில் சதம் கண்டு 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி 19-வது ஓவர் 2-வது பந்தில்தான் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்த 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் கிறிஸ் மோரிஸ் 38 ரன்கள் விளாசித் தள்ள கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் பின்னி எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது. புனே அணியில் வழக்கம் போல் இம்ரான் தாஹிர் மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பாவுக்கு சாத்துமுறை நடந்ததில் 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிரடிக்கு வழக்கம் போல் மூலக்காரணமாக டிண்டா விளங்கினார் முதலில் இவர் ஓவர்தான் வெளுத்து வாங்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய புனே அணியில் ஸ்மித் இல்லை, ரஹானே கேப்டன். புனே அணி படுமோசமான பேட்டிங் ஆடி 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு பரிதாபமாகச் சுருண்டது. ஜாகீர் கான் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா மிகப்பிரமாதமாக வீசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆதித்ய தாரே விக்கெட் விழுந்தவுடன் 2-வது ஓவரிலேயே இறங்கிய சஞ்சு சாம்சன், ரைசிங் புனே அணியின் வேகப்பந்து வீச்சை சிலபல பவுண்டரிகள் மூலம் புரட்டி எடுத்தார். டிரைவ்கள், பஞ்ச்கள் என்று களவியூகத்தை சிதறடித்தார். டிண்டா, தீபக் சாஹர் ஆகியோர் சரியாக வீசாததைப் பயன்படுத்தி 14 பந்துகளிலேயே 31 ரன்கள் என்று வேகம் காட்டினார். ஆனால் ஸாம்பா, தாஹிர், ரஜத் பாட்டியா அறிமுகம் ஆனவுடன் களவியூகமும் பரவலாக்கப்பட்டவுடன் சாம்சன் அதிரடி தொடக்கம் மந்தம் கண்டு 45 பந்துகளில் 54 என்று இருந்தார். அப்போது இவருடன் ஆடிய இளம் புலி ரிஷப் பந்த் 22 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார்.

அதன் பிறகு ஸாம்பாவை நேர் சிக்ஸ் அடித்த சாம்சன் அடுத்த 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதில்தான் டிண்டா வள்ளல் ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து டெல்லி அதிரடியைத் தொடங்கி வைத்தார்.

இந்த இன்னிங்ஸ் குறித்து சஞ்சு கூறும்போது, “இந்த நாள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், என் வாழ்நாளில் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. உலகின் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணியில் ஆடுவதே ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும். எனவே அணிக்குள் நுழைய சிறப்பான இன்னிங்ஸை ஆட வேண்டும். இந்த வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.

ராகுல் திராவிட், ஸுபின் பரூச்சா, பேடி அப்டன் ஆகியோருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு சரியாக அமையவில்லை, ஆனால் அப்போதும் எனக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்து தக்கவைத்தனர். எனவே இந்த சதத்தை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த போது எனக்கு வயது 17, அங்கிருந்து திராவிடுடன் பணியாற்றி வருகிறேன். அவரது வழிகாட்டுதலில் ஆட்டத்தை கற்றுக்கொள்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நிறைய வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்தவகையில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.

நாம் எப்பொதும் வெற்றியை ருசித்தால் கற்றுக் கொள்ள முடியாது. தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். என்னுடைய கடந்த காலம் நான் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக வழிவகை செய்துள்ளது” என்றார்.